January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்த மேற்கிந்திய தீவுகள்

மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை சென்றடைந்துள்ளது.

26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி நேற்று காலை விமானம் மூலம் பாகிஸ்தானின் கராச்சியை சென்றடைந்தது.

2018ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக 3 மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி நியூசிலாந்து அணி தனது பாகிஸ்தான் தொடரை கடைசி நேரத்தில் இரத்து செய்து நாடு திரும்பியது.

அதேபோல இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் தொடரை இரத்து செய்வதாக அறிவித்தது.

இதனிடையே, பாகிஸ்தான் சென்றடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியினர் விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாங்கள் தங்கும் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான போட்டித் தொடர் சிறப்பு பாதுகாப்புக்கு மத்தியில் கராச்சியில் நடைபெறவுள்ளது.

இதில் டி-20 போட்டிகள் எதிர்வரும் 13, 14, 16 ஆகிய திகதிகளிலும், ஒருநாள் போட்டிகள் 18, 20, 22 ஆகிய திகதிகளிலும் நடைபெறவுள்ளது.

இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கிரென் பொல்லார்ட், பேபியன் அலென், ஒபெட் மெக்காய் ஆகியோர் காயம் காரணமாகவும், எவின் லீவிஸ், சிம்ரோன் ஹெட்மயர், அந்த்ரே ரஸல், சிமோன்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணத்தினாலும் இந்த போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

இதன்படி, டி-20 அணியின் தலைவராக நிகோலஸ் பூரனும், ஒருநாள் போட்டி அணியின் தலைவராக ஷாய் ஹோப்பும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.