2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 15 வது ஐ.பி.எல் தொடர் சென்னையில் ஏப்ரல் 2 ஆம் திகதி ஆரம்பமாகலாம் என பி.சி.சி.ஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் சபை ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் தொடரை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமான 14 ஆவது ஐ.பி.எல் தொடரானது கொரோனா பாதிப்பினால் பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னர் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் 4 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ உறுதியாகத் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கூடுதலாக 2 அணிகளை சேர்த்து 10 அணிகள் களமிறங்கவுள்ளன. அதன்படி அஹமதாபாத், லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் 15 ஆவது ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனிடையே, அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாகும் திகதி குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
இதில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாகும் என்றும், சென்னையில் முதலாவது போட்டி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், இறுதிப்போட்டி ஜூன் முதல் வாரத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதேவேளை, முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.