January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அணிக்கு பாராட்டு விழா

சென்னையில் நவம்பர் 20 ஆம் திகதி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

கடந்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2021 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நான்காவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இதையடுத்து, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பாராட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது மகேந்திர சிங் டோனி என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே சென்னை வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த சென்னை அணி நிர்வாகம் முடிவெடுத்த நிலையில், டி-20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை அணித் தலைவர் டோனி, சர்துல் தாகூர், ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே இருந்ததால் பாராட்டு விழாவிற்கான திகதி முடிவு செய்யப்படாமல் இருந்தது.

தற்போது டி-20 உலகக் கிண்ணத் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் சென்னை அணி வீரர்களுக்கான பாராட்டு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.