May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2021: வெற்றியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பரிசுத்தொகை விபரங்கள்

Photo: Twitter/IPL

துபாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களினால் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நான்காவது தடவையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஐ.பி.எல். தொடரில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும்.

இதன்படி, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபா பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இது இலங்கை பணப்பெறுமதியில் கிட்டத்தட்ட 53.8 கோடி ரூபாவாகும்.

அதேபோல, இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபா பரிசாக வழங்கப்பட்டது. இது இலங்கை பணப்பெறுமதியில் 33.6 கோடி ரூபாவாகும்.

இந்த சீசனில் 635 ஓட்டங்களை எடுத்து அதிக ஓட்டங்களை எடுத்த வீரராக சாதனை படைத்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ருத்ராஜ் கெய்க்வாட் செம்மஞ்சள் நிற தொப்பியை வென்றார்.

இதன்படி, அவருக்கு செம்மஞ்சள் தொப்பி மற்றும் 10 இலட்சம் ரூபா பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

அதேபோல் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்ஷல் பட்டேல் வென்று சாதனை படைத்தார்.

அவர் 15 போட்டிகளில் ஒரு ஹெட்ரிக் மற்றும் ஒரு 5 விக்கெட்டுக்கள் உட்பட 32 விக்கெட்டுக்களை வீpழ்த்தி ஊதா நிற தொப்பி மற்றும் வெற்றி 10 இலட்சம் ரூபா பரிசுத் தொகையை வென்றார்.

இதனிடையே, இம்முறை ஐ.பி.எல் தொடரில் வளர்ந்துவரும் வீரர் விருதை சென்னை அணியை சேர்ந்த ருத்ராஜ் கைக்வாட் வென்று அசத்தினார். இதற்காக 10 இலட்சம் ரூபா பணப்பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டின் சிறந்த பிடியெடுப்பை எடுத்த வீரராக கொல்கத்தா அணிக்கு எதிராக சுனில் நரைன் கொடுத்த பிடியெடுப்பை அபாரமாகப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இளம் வீரர் ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டார், அவருக்கு 10 இலட்சம் ரூபா பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இந்த சீசனில் அதிக ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ஓட்டங்களைக் குவித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த சிம்ரோன் ஹாட்மையர் இந்த ஆண்டின் சுப்பர் ஸ்ட்ரைக்கர் விருதை வென்றதுடன், அவருக்கு ரூபாய் 10 இலட்சம் ரூபா பணப் பரிசு மற்றும் வெற்றிக் கேடயம் கொடுக்கப்பட்டது.

இதேவேளை, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 30 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ் அணித்தலைவர் கேஎல் ராகுல் ‘லெட்ஸ் க்ரக் இட்’ விருதையும் அதற்காக 10 இலட்சம் ரூபா பரிசுத் தொகையையும் வென்றார்.

இந்த ஆண்டின் ட்ரீம் லெவன் கேம் சேஞ்சர் விருதை 1081 புள்ளிகளுடன் பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் வென்றதுடன், அவருக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.

இந்த சீசனில் போட்டியை மாற்றிய கேம் சேஞ்சர் வீரருக்கான விருதை கொல்கத்தா அணிக்காக விளையாடிய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் வென்று அசத்தினார், அவருக்கு 10 இலட்சம் ரூபா மற்றும் அதற்கான வெற்றிக் கேடயம் பரிசு கொடுக்கப்பட்டது.

இந்த ஆண்டின் அதிக மதிப்புள்ள வீரர் அதாவது தொடர் நாயகன் விருதை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைச் சேர்ந்த ஹர்ஷல் பட்டேல் பெற்றுக்கொண்டார். அவருக்கு அதற்கான வெற்றிக் கேடயம் மற்றும் 10 இலட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அதேபோல் இறுதிப் போட்டியில் 86 ஓட்டங்களை எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்ட பாப் டு பிளெசிஸ் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார், அவருக்கும் வெற்றிக் கேடயம் மற்றும் பரிசுத் தொகையாக 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, இந்த ஆண்டிற்கான பெயார் பிளே விருது அதாவது அறத்துடன் விளையாடிய அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தேர்வு செய்யப்பட்டு பரிசு தொகை வழங்கப்பட்டது.