January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: ஜப்னா கிங்ஸ் அணியில் மூன்று தமிழ் வீரர்கள்!

Photo: Facebook/ Jaffna Kings

இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கும் ஜப்னா கிங்ஸ் அணியில் வட மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாவது லங்கா பீரிமியர் லீக் (எல்.பி.எல்) தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான, வீரர்கள் ஏலம் தொலைக் காணொளி ஊடாக இடம்பெற்றது.

கிறிஸ் கெய்ல், இர்பான் பதான், பாப் டு பிளெசிஸ், சஹீட் அப்ரிடி உள்ளிட்ட 300 சர்வதேச வீரர்கள் அடங்கலாக 600 வீரர்கள் இம்முறை வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றனர்.

இதன்படி, இம்முறை எல்.பி.எல் தொடரில் புதிய பெயருடன் களமிறங்கும் ஜப்னா கிங்ஸ் அணிக்காக வடக்கைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்

இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண எல்.பி.எல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் தெய்வேந்திரம் டினோஷன் ஆகிய இருவரும் இம்முறை எல்.பி.எல் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனர்.

யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான விஜயகாந்த் வியாஸ்காந்த், கடந்த ஆண்டு நடைபெற்ற எல்.பி.எல் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக ஒருசில போட்டிகளில் விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேநேரம், யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் உதவித் தலைவரான தெய்வேந்திரம் டினோஷனுக்கு கடந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் எந்தவொரு போட்டியிலும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இது இவ்வாறிருக்க, இலங்கை இராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ரட்னராஜா தேனுரதன், ஜப்னா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் வீரரான இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற எல்.பி.எல் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக, ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், இலங்கையின் முன்னாள் வீரர் உபுல் தரங்க போன்ற வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், கடந்த ஆண்டு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் வீரரும், இலங்கை பொலிஸ் கழகத்துக்காக விளையாடி வருகின்ற கனகரட்னம் கபில்ராஜ், இம்முறை எல்.பி.எல் தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் வீரர் மொஹமட் சமாஸ் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியிலும், கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரியின் முன்னாள் வீரர் மதுஷன் ரவிச்சந்திரகுமார் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்.பி.எல் தொடரின் இரண்டாவது சீசன் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.