July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2021: பிராவோவின் நீண்டநாள் சாதனையை சமன் செய்த ஹர்ஷல் பட்டேல்

Photo: Twitter/IPL

ஐ.பி.எல் தொடரின் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்து வீச்சாளர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் சமன் செய்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி தோற்றிருந்தாலும் அந்த அணி சார்பாக விளையாடிய ஹர்ஷல் பட்டேல் ஐ.பி.எல் தொடரின் நீண்ட நாள் சாதனையொன்றை சமப்படுத்தினார்.

நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களைக் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இந்த தொடரில் மொத்தம் 32 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுக்கு வீழ்த்திய வீரராக வலம் வந்த சென்னை அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் அவர் ஒன்பது சீசன்களாக பந்துவீசி உள்ளார். இதுவரை 63 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்ஷல் பட்டேல் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 32 விக்கெட்டுகள் இந்த சீசனில் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2013 ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ 18 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஹர்ஷல் பட்டேல் தற்போது 15 போட்டிகளில் மட்டுமே விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, நேற்றைய போட்டியில் ஹர்ஷல் பட்டேல் வீசிய 17 ஆவது ஓவரில் சுனில் நரைன் கொடுத்த பிடியெடுப்பை தேவ்தத் படிக்கல் தவற விட்டார். ஒருவேளை அதை அவர் பிடித்து இருந்தால் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஹர்ஷல் பட்டேல் படைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.