Photo: SLC media
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுகளை இழந்து 541 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
அந்த அணி சார்பில் அதிகப்படியாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 163 ஓட்டங்களையும், மொமினுல் ஹக் 127 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 90 ஓட்டங்களையும், முஸ்பிகுர் ரஹீம் 68 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 50 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், தனஞ்சய டி சில்வா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 648 ஓட்டங்களை பெற்ற பின்னர் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதில் சுமார் 11 வருடங்களுக்கு பிறகு இலங்கை அணி இன்னிங்ஸ் ஒன்றில் 600 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 244 ஓட்டங்களையும், தனன்ஜய டி சில்வா 166 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக டஸ்கின் அஹமட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில், போட்டியின் கடைசி நாளான இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) தினம் 107 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மீண்டும் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை பெற்றபோது மழை குறுக்கிட்டது.
இதன் காரணமாக 5 ஆம் நாள் ஆட்டம் தடைப்பட போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பாக தமிம் இக்பால் 74 ஓட்டங்களையும், மொமினுல் ஹக் 23 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக கன்னி இரட்டைச் சதமடித்து பல சாதனைகளை முறியடித்த இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவாகினார்.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.