January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியா வந்து விளையாட பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்கப்படும்’; பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு

Photo: PCB

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத் தொடருக்காக இந்தியா வரும் பாகிஸ்தான் அணிக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் விசா வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் சபை (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

டி-20 உலகக் கிண்ணப் போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ள இம்முறை உலகக் கிண்ணத்தில் மொத்தமாக 45 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இத்தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. ஏனெனில், கடந்த 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா–பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எந்தவொரு இருதரப்பு தொடர்களும் நடத்தப்படவில்லை.

இதனால் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சுற்றுப்பயணம் செய்து விளையாடாமல் வேறு வேறு நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகின்றன.

எனவே, இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் ‘விசா’ வழங்குவதில் எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை இந்தியா தர வேண்டும், இல்லாவிட்டால் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றும்படி சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் வலியுறுத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்தது.

இந்த நிலையில், டி-20 உலகக் கிண்ணப் போட்டி குறித்து ஆலோசிக்க பிசிசிஐ உயர்மட்டக் குழு காணொளி மூலம் கூடியது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பிசிசிஐ இன் முக்கிய அதிகாரி கூறுகையில்,

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்கிறது. இதற்கான விசா அனுமதியை வழங்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்கனவே ஐசிசியிடம் கேட்டு இருந்தது.

எனவே, டி-20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எல்லை தாண்டி இந்தியா வருவதற்கு அனுமதி கிடைக்குமா? என்பது இதுவரை எதுவும் தெரியவில்லை என தெரிவித்தார்.