November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் அலங்காரக் கந்தன் தேர்த் திருவிழா

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா நாள் இன்றாகும்.

ஆகஸ்ட் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம், நாளை தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவு காணவிருக்கிறது.

நாளை மறுதினம் திருக்கல்யாண பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளது.

கொடியேற்றம் முதல் தீர்த்தத் திருவிழா வரை கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாக்களின் தத்துவங்கள் குறித்து சைவ நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

இந்தத் திருவிழாக்கள், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இறைவனின் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன.

சித்திரத் தேரின் சிறப்புக்கள்

தேர்த்திருவிழா அழித்தல் தொழிலைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.

இத்தகைய தேரில் எறிச் சென்றே தேவர்களைக் காப்பதற்காக இறைவன் அசுரர்களை அழித்தான் என்ற தொன்மக் கதை இங்கு குறிப்பிடத்தக்கது.

சித்திரத் தேர் ஒன்றின் சில்லிலிருந்து இறைவன் எழுந்தருளும் பீடம் வரையான பகுதி மூன்று பிரிவாகவோ ஐந்து பிரிவாகவோ வகுக்கப்பட்டு சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

இறைவன் காட்சிதரும் பகுதிக்கு மேலுள்ள சிகரம் ராஜ கோபுர விமானத்தின் மறுவடிவம் போல அழகுறக் காட்சி தரும்.

தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடுவது போல திருக்கோயில்களின் தேரோட்டம் சகல தோஷத்தையும் போக்கி – ஏற்ற இறக்கங்களை நீக்கி நிலையான வாழ்வை தந்துவிடும்.

தேரோட்டம் பார்ப்பவர்கள் அனைவரும் நிலையான வாழ்வை பெற்றுவிடுவர் என்பது ஐதீகம்.

நல்லூர் தேர் வரலாறு

1964 ஆம் ஆண்டு – அப்போதைய கோவில் அதிகாரியாக இருந்த சண்முகதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் ஆலயத்தில் இருந்த தேர் பழுதடைந்த நிலையில், புதிய தேர்த் திருப்பணியை நிறைவேற்றி, தானும் வடம் பிடித்து இழுத்து இரதோற்சவத்தை இன்னும் அழகாக்கினார்.

சித்திரத்தேர் திருப்பணி நிறைவேற்றி தானும் வடம்பிடித்துத் தேர் இழுக்கும் சண்முகதாச மாப்பான முதலியார்

அந்தத் தேரே இப்போதும் தேர்த்திருவிழா தினத்தில் சண்முகப்பெருமான் ஆரோகணிக்கும் தேராகும்.

தேர்த்திருவிழா நாளில் ஆறுமுகப் பெருமான் கஜாவல்லி, மஹாவல்லி சமேத ஸ்ரீ சண்முகப் பெருமானாக எழுந்தருவது வழமை.

நல்லூர்த் தேர் என்பது யாழ்ப்பாணத்தவர்களுக்கு மட்டுமன்றி தமிழர்கள் வாழும் இடமெங்கும் எழுச்சி மிக்க நாளொன்றாகும்.

உள்ளூரில் இருந்து தேர்த்திருவிழாவை நேரடியாக காணக் கிடைத்தவர்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்கள்.

நேரடியாகத் தேர்த் திருவிழாவைக் காண முடியாதவர்களும் நேரடி ஒளிபரப்புகளின் வாயிலாக சண்முகப் பெருமானைக் கண்ணாரக் கண்டு களிப்பர்.


அலங்காரக் கந்தன்

ஈழத்து ஆலயங்களில் ‘அபிஷேகக் கந்தன்’ எனப் போற்றப்படும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், ‘அன்னதானக் கந்தன்’ எனப் எனப் போற்றப்படும் செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆகியவற்றின் வரிசையில் ‘அலங்காரக் கந்தன்’ எனப் போற்றப்படுவது நல்லூர் கந்தசுவாமி ஆலயம் ஆகும்.

பெயருக்கேற்றால் போல பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்கவர் நல்லூரில் எழுந்தருளியிருக்கும் வேலவர்.

ஆலயத்தின் விசேட தினங்களாயினும், மஹோற்சவ தினங்களாயினும் முருகப்பெருமான் எழுந்தருளும் போது அருளொளி வீசும் அவரது கம்பீரமான தோற்றமும், எல்லையில்லாக் கொள்ளை அழகும் அதற்குச் சான்று.

விசேட திருவிழா நாட்கள் தவிர மஹோற்சவ காலங்களில் தினமும் வேல் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராக எழுந்தருளுவது வழமை.

சில விசேட தினங்களில் ஆலயத்தில் உள்ள மற்றொரு மூர்த்தியான முத்துக்குமாரரும், தேர்த்திருவிழா மற்றும் கந்தசஷ்டி சூரன் போர் நாட்களில் ஸ்ரீ சண்முகப்பெருமானும் எழுந்தருளுவது வழமையாகும்.

எழுந்தருளுவது எந்த மூர்த்தியாக இருந்தாலும், எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கண்களைக் கொள்ளை கொள்ளும் அழகும் அருளும் நிறைந்த ஆலயத்தில் மிக நீண்ட காலத்துக்குள் இம்முறை தான் உள்வீதியில், அடியவர்கள் படைசூழாமல் திருவிழா இடம்பெறுகின்றது.

‘பஞ்சம் படை வந்தாலும், பாரெல்லாம் வெந்தாலும் அச்சுவமோ நாங்களடி கிளியே, நல்லூர் கந்தன் தஞ்சமடி’ என்று யோகர் சுவாமிகள் பாடியது போல நாட்டில் கொடிய யுத்தம் இடம்பெற்ற காலங்களில் கூட எவ்வித அச்சமுமின்றி நல்லூரானைத் தஞ்சமென்றடைந்த அடியவர்களுக்கு அருள்பாலித்தார் முருகன்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தமிழுக்கும் சைவத்திற்கும் அருந் தொண்டுகள் ஆற்றிய யாழ்ப்பாணத்து அரசர்களது நேரடிப் பரிபாலனத்தில் இருந்து வந்த முக்கிய வணக்கஸ்தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

நல்லூர் வரலாற்று நூல்கள்

அதன் வரலாறு பற்றிய பல்வேறு குறிப்புகள் நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்நியர் வருகையின் பின்னான சைவ சமய எழுச்சியின் முக்கியமானதொன்றாக நல்லூர் ஆலயத்தின் வியாபகம் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாயலயத்தின் வரலாறு பற்றி ‘யாழ்ப்பாண வைபவமாலை’ பல குறிப்புகளைக் கொண்டிருக்கிறது எனப்படுகிறது. இது தவிர ‘நல்லைக் கலிவெண்பா’, ‘நல்லைக் வெண்பா’, ‘நல்லையந்தாதி’, ‘நல்லைக் குறவஞ்சி’, ‘நல்லை கந்தசுவாமி விஞ்சதி’, ‘நல்லை வேலவருலா’ போன்ற நூல்களின் மூலம் நல்லைக்குமரனின் அருள் பரப்பப்படுகிறது.

ஆலய சிறப்புக்கள்

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்துக்கென்று சில சிறப்பம்சங்களும், தனித்துவமான தன்மைகளும் உண்டு.

நேரந்தவறாத ஆறு காலப் பூஜை, அடியவர்கள் அனைவரும் சமமாகப் பாவனை செய்யப்படும் வகையில் ஒரு ரூபா அர்ச்சனைச் சிட்டை என்பன நல்லூரானின் சிறப்பம்சங்கள்.

அதேபோலவே நல்லூர் ஆலயத்தில் தினமும் அதிகாலை வேளையில் இடம்பெறும் பள்ளியெழுச்சியும், மாலை வேளையில் இடம்பெறும் பள்ளியறைப் பூஜையும் நல்லூரின் தனித்துவமான மரபுகளில் ஒன்று.

ஒவ்வொரு நாளும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து முருகப் பெருமானை சிறிய மஞ்சம் ஒன்றில் எழுந்தருளச் செய்து அவரைப் பாடிப் பரவிய படி அழைத்துச் சென்று பள்ளியறையில் அமரச் செய்து திரு ஊஞ்சல் பாடித் துயிலுற வைப்பர்.

காலையில் பள்ளியறை வாயிலில் நின்று திரு நல்லூருத் திருப்பள்ளியெழுச்சி பாடுவர்.

பின்பு முருகப்பெருமானை சிறு மஞ்சத்தில் ஏற்றி அழைத்து வந்து மூலஸ்தானத்தில் எழுந்தருளச் செய்து அன்றைய நாளின் அபிஷேக ஆராதனைகளை ஆரம்பிப்பதும் தனித்துவமான மரபு.

எல்லாவற்றுக்கும் மேலாக நல்லூரில் அமர்ந்து அருளாட்சி புரிகின்ற ஸ்ரீ சண்முகப் பெருமான், பழனி சந்நிதானத்தில் இருக்கின்ற தண்டாயுதபாணி, வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி, மூலவராக அமர்ந்து அருளுகின்ற வேலவர், காவற் கடவுளான வைரவப்பெருமான் மற்றும் நல்லூர்த் தேரடி என்பன மாண்பும் மகிமையும் மிக்க அம்சங்களாகும்.

தொகுப்பு : சண்முககுமரன்