January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறப்புகள் நிறைந்த ‘சித்திரா பூரணை’

சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரமும் பூரணையும் கூடிய நன்னாள் சித்திரா பூரணை தினமாகும்.

இந்த தினம் அற்புத நாளாகவும் பக்தி நிறைந்த நாளாகவும் கருதப்படுகின்றது.

மனோ பலம் தரும் சந்திரன்

சோதிட ரீதியாக சூரியன் மேடத்தில் உச்சம் பெற்று நேர் எதிரில் சந்திரனின் சம உச்ச வீடான துலாத்தில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பூரணை திதியே சித்திரா பூரணையாகும்.

ஆத்த காரகனும் மனோகாரகனும் 180 பாகையில் சந்திக்கும் நாள் சந்திரன் சூரியனிடம் இருந்து வெப்ப ஒளியைப் பெற்று பூமிக்கு குளிர்ந்த ஒளியைக் கொடுக்கும் சூரியன் அதிக ஒளி தரும் உச்ச நிலையான சித்திரை மாதத்தில் சந்திரன் அதிக சக்திமிக்க ஒளியைப்பெற்று பூமிக்குத் தருவதால் அன்று களங்கமில்லாமல் மிகப்பிரகாசமாகவும் அதி சக்திமிக்க ஒளியைத் தருகிறது.

அன்று தான் சித்திரா பூரணை நாளாகும். அறிவியல் ரீதியாக இந்த நாளில் மனிதர்களின் ஆரோக்கியம், மனோபலம் கூடுகிறது.

புராணக் கதைகள்

சித்திரா பூரணையை நாம் விரத நாளாக அனுட்டிக்கிறோம். இதற்குப் புராணக் கதைகள் உண்டு.

ஒருமுறை கைலாயத்தில் பார்வதி தேவியார் ஒரு அழகான ஒவியத்தைக் கண்டு ரசித்து மகிழ்ந்தார்.

அதை சிவபெருமானிடம் காட்டி அதை உயிர்ப்பித்து தரும்படி வேண்டினார். சிவபெருமானும் தன் மூச்சுக் காற்றினால் அந்த ஓவியத்தை உயிர்ப்பித்துக் கொடுத்தார்.

சித்திரம் மூலம் பூரணை தினத்தில் பிறந்தவர் சித்திரகுப்தன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.

சித்திரகுப்தனுக்கு சிறந்த கல்வி, ஞானம் என்பவற்றை போதித்து அவரை எமதர்ம ராஜனிடம் பாவ புண்ணிய கணக்கு எழுதும் கணக்காளராக நியமித்தார்.

அவரிடம் ஒரு ஏடும் எழுத்தாணியும் கொடுத்து அவரை அந்தப்பதவியில் சிவபெருமான் அமர்த்தினார்.

எனவே சித்திரா பூரணையில் வழிபடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. மனிதர்கள்,செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு உரிய சொர்க்க நகர முறையை தெரிவு செய்கிறார்.

சித்திர குப்தரை வழிபடுவதனால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் குறைகின்றன.

அன்றைய தினம் சித்திர குப்தனுக்கு விரதம் இருந்து அவரை வழிபட வேண்டும்.

அன்று விரதம் கடைபிடிக்க வேண்டும் பூஜை அறையில் விநாயகர் படம் சிலைவைத்து அரிசி மாவால் கோலம் இட்டு சித்திர குப்தன் படம் வைத்து அதன் அருகில் ஒரு கொப்பியும், பேனாவையும் வைக்க வேண்டும்.

சித்திர குப்தன் படம் இல்லாவிட்டால் அதற்கு பதிலாக கும்பம் வைத்து வழிபடலாம். தலைவாழை இலையில் சர்க்கரைப் பொங்கல் வெண்பொங்கல், பழம், கலவை சாதம், கொழுக்கட்டை, நுங்கு, இனிப்பு, பலகாரம் படைக்க வேண்டும். மோர், பானகம், போன்றவற்றையும் கொள்ளினால் ஆன உணவையும் படைத்து மரல்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

மற்றவர்களுக்கும் உணவு கொடுத்து பரிமாற வேண்டும். இந்நாளில் தானம் செய்வது சிறந்தது. இன்றும் ஒரு புராணக் கதை உண்டு.

இந்திரனும் மனைவியும் நீண்டகாலம் குழந்தைகள் இல்லாமல் துன்பப்பட்டார்கள். இறைவனிடம் குழந்தை வரம் வேண்டி தவம் செய்தனர்.

அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த சிவபெருமான் காமதேனுவை கருத்தரிக்க வைத்து ஒரு குழந்தையை பரிசீலிக்க வைத்தார்.

அப்படி காமதேனு மூலம் வந்த குழந்தைக்கு சித்திரகுப்தன் என்று அழைத்து அவரை எம தர்மனின் கணக்குப் பிள்ளையாக நியமித்ததாகவும் புராணம் கூறுகிறது.

வழிபாட்டு முறைகள்

சித்திரா பூரணை பிதிர்கடன் செய்யும் விசேட நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் தாயை இழந்தவர்கள் விரதத்தை அனுட்டிக்க வேண்டும்.

எல்லா பூரணை தினத்திலும் விரதம் அனுட்டிக்க முடியாதவர்கள் சித்திரா பௌர்ணமி அன்று நிச்சயம் இவ்விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

அன்று புண்ணிய நதிகளில் நீராடி பிராமணருக்கு தானம் கொடுத்து வீட்டில் உணவு சமைத்து தாயின் படத்திற்கு படைத்து வழிபட வேண்டும்.

மற்றவர்களுக்கும் உணவு கொடுத்து உண்ண வேண்டும். தானம் செய்தல் சிறப்பானவை.

ஆலயங்களுக்கு சென்று மோட்ச தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுதல் வேண்டும்.

சித்திரை மாதத்தில்  சித்திரைக் கஞ்சி ஆலயங்களில் காய்ச்சி படைப்பார்கள்.

குறிப்பாக அம்மன் ஆலயம் சிவன் ஆலயம், முருகன் ஆலயங்களில் விசேட பூசைகள் நடைபெறும். சித்திரை பௌர்ணமியில் சித்திர குப்தனாரின் கதை வாசிப்பார்கள்.

வாசிக்க முடியாவிட்டாலும் அருகில் இருந்து கேட்பதிலே நிறைந்த பலன் கிடைக்கும். என்பது ஜதீகம். இந்நாளில் அம்பிகையின் பாடல்கள் பாடலாம். சித்திரகுப்னின் சுலோகமும் கூறலாம்.

சித்ர குப்த மஹாப் ராக்ஞம்
லேகனீ புத்ர தாரிணம்
சித்ரா ரத்னாம் பாதாரம் மதயஸ்தம்
ஸர்வ தேஹினாம்

என்று சித்ர குப்தனை வணங்கி மலையளவு செய்த பாவத்தை கடுகளவாக மாற்று கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாக உயர்த்து என்று வேண்டி இறையருள் பெறுவோமாக.

தமிழ்வாணி (பிரான்ஸ்)