May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சேர். பொன். இராமநாதன்: இலங்கை சரித்திரத்தின் ‘சிறப்பு அத்தியாயம்’

இலங்கையின் தேசியத் தலைவர்களில் ஒருவரான சேர்.பொன். இராமநாதனின் 90 ஆவது நினைவு தினம் இன்றாகும் (நவம்பர் 26).

அரசியல் முதல் ஆன்மீகம் வரை பல துறைகளிலும் பன்முகத் திறமையாளராக பங்களிப்புச் செய்துள்ள சேர்.பொன். இராமநாதன், இலங்கையின் வரலாற்றில் இடம்பிடித்த இணையற்ற தலைவர்களில் ஒருவர்.

பிறப்பும் கல்வியும்

யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் – செல்லாச்சி தம்பதியரின் இரண்டாவது புதல்வராக 1851 ஏப்ரல் 16 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோர் இவரது சகோதரர்கள்.

ஆரம்பக் கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியில் கற்றார். பின்னர் 13 ஆவது வயதில் சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.  சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக்கல்வி பயின்று 1873 இல் வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்து 1906 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

அரசியல் பிரவேசம்

இலங்கையை பிரித்தானியர்கள் ஆண்ட நேரம் சுதேசிகளில் படித்தவர்களுக்கு சட்டசபையில் அங்கத்துவம் கொடுக்க வேண்டும் என ஆளுநர் விரும்பினார். இராமநாதனின் ஆங்கிலப் புலமையும் சொல்வன்மையும் பிரித்தானிய ஆளுநருக்கு மிகவும் பிடித்திருந்தது.

1879-இல் இலங்கையில் எத்தனையோ சிங்களக் கல்விமான்கள் இருந்த போதும் இராமநாதனையே பிரித்தானிய ஆட்சியாளர்கள் சட்ட  சபைக்கு நியமித்தார்கள். பின்னர் 1911-இல் நடந்த முதலாவது தேர்தலிலும் முழு இலங்கையர் சார்பிலும் ஒரே உறுப்பினராக அவரே தெரிவு செய்யப்பட்டார்.

1897ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் 50 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. அதற்காக பிரித்தானியாவால் ஆளப்பட்ட நாடுகளில் இருந்து ஒரு பிரதிநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பு இலங்கையில் இராமநாதனுக்கே வந்தது.  அந்த விழாவில் ‘இலங்கையின் முழுமையான தேசியவாதி’ எனும் கௌரவம் அவருக்கு கிடைத்தது.

மிகுந்த சொல்வன்மையுடனும் வாதத் திறமையுடனும் சுதேச நலனை முன்னிறுத்திய இராமநாதனை சிங்களத் தலைவர்களும் தேசியத் தலைவராக மதித்தார்கள்.

யாழ். இராமநாதன் மகளிர் கல்லூரி

1921 இல் பிரித்தானிய அரசின் உயர் கௌரவமான சேர் (Sir) பட்டம் அவருக்கு கிடைத்தது.

தோளில் சுமந்த சிங்களத் தலைவர்கள்

1915 ஆம் ஆண்டு இராமநாதன் அவர்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைந்தது.  இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இனக் கலவரத்தை தூண்டியதாக டி. எஸ். சேனநாயக்க, டி. எஸ்.விஜேவர்த்தன போன்ற பல சிங்களத் தலைவர்களை பிரித்தானிய ஆட்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

இவர்களை விடுதலை செய்யும்படி குரல் கொடுத்தவர்களையும் ஆங்கிலேயர்கள் சிறையில் அடைத்தார்கள்.

அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். இது பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் பிரசுரமாயின.

ஒருவருக்கும் கூறாமல் பாய்மரக் கப்பல் மூலம் பிரித்தானியா சென்ற இராமநாதன், பிரித்தானிய அதிகாரிகளுடன் வாதாடி வெற்றி பெற்றார். சிறையில் இருந்தவர்கள் சில நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இலங்கை திரும்பிய இராமநாதனை வரவேற்க சிங்களத் தலைவர்கள் அனைவரும் காலிமுகத் திடலுக்கு வந்திருந்தார்கள். இராமநாதன் வந்து இறங்கியவுடன் மலர்தூவி, மலர் மாலை அணிந்து ஆரவாரம் செய்து வரவேற்ற சிங்களத் தலைவர்கள் அவரை தோளில் சுமந்து ஊர்வலமாக சென்றார்கள்.

கல்விப் பணியும் சமூகத்தொண்டும்

இலங்கையில் பல்கலைக்கழகம் அமைவதற்கு முதல் வித்திட்டவர்கள் சேர் இராமநாதனும் அவரது சகோதரர் சேர்.பொன் அருணாசலமும் தான் என்றால் அது மிகையாகாது. இலங்கைப் பல்கலைக்கழகம் உருவாக அடித்தளமிட்ட பொன்னம்பலம் சகோதரர்களின் நினைவாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இராமநாதன் மண்டபம், அருணாசலம் மண்டபம் என்பன திகழ்கின்றன.

பெண்கள் கல்வியறிவு பெற்று சுதந்திரமாக வாழவேண்டும் என்றும் தமிழர்களின் சைவ சமயம், கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் 25 ஏக்கர் காணியை வாங்கி 1913 ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி பெண்களுக்குரிய இராமநாதன் மகளிர் கல்லூரியை  நிறுவினார்.

பாடசாலையில் விடுதி அமைத்து பெண் பிள்ளைகளை தங்கி இருந்து படிப்பதற்கு வழிசமைத்தார் இராமநாதன். இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைக்கப்பட்டனர். கல்லூரியின் முதல் அதிபராக ரோரன்ஸ் அம்மையார் நியமிக்கப்பட்டார்.

ஆளுமை நிறைந்த லோரன்ஸ் அம்மையார் அதிபர் இகல்லூரியை திறம்பட நிர்வகித்தார். பர்மா, இந்தியா சென்றவர்கள் தங்கள் பிள்ளைகளை கொண்டு வந்து இராமநாதன் கல்லூரியில் சேர்த்தார்கள்.

செல்லப்பா சுவாமிகளின் ஆசியுடன் சேர். பொன். இராமநாதனால் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி இன்றளவும் சைவத்தைப் பேணும் கல்லூரியாக தலைநிமிர்ந்து நிற்கின்றது.

ஆண்களுக்காகவும் சைவப் பாரம்பரியத்தை பேணும் பரமேஸ்வராக் கல்லூரியை அமைத்தார் இராமநாதன்.  இக்கல்லூரி 1970களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக உள்வாங்கப்பட்டது.

சமயப் பணி

கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயம்

இராமநாதனது தந்தையார் பொன்னம்பல முதலியாரும் அவரது குடும்பத்தவர்களும் சிவ பக்தர்கள். அவர் கொழும்பில் ஒரு சிவாலயம் அமைக்க எண்ணினார்.

கொழும்பு கொச்சிக்கடையில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி 1856 இல் செங்கற்களால் பொன்னம்பலவானேஸ்வரர் சிவாலயத்தை அமைத்தார்.

அவருக்குப் பின்னர் 1907ஆம் ஆண்டில், சேர்.பொன். இராமநாதன் அந்தக் கோயிலை கருங்கற் கோயிலாக நிர்மாணித்து 1912 நவம்பர் 21 இல் குடமுழுக்கு செய்வித்தார். இக்கோபுரக் கட்டடம் விஜய நகரக் கட்டடக் கலையைத் தழுவி கட்டப்பட்டது. கோயில் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டன.

இக்கோவிலில் இராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்ட முன்னரே சேர்.பொன். இராமநாதன் இயற்கை எய்திவிட்டார்.  பல ஆண்டுகளுக்குப் பின்னர் சீமெந்தினால் இராஜகோபுரம் கட்டப்பட்டது.

மறைவு

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு தன் இறுதிக் காலத்தை நகர்த்திய சேர்.பொன். இராமநாதன், 1930 நவம்பர் 26 ஆம் திகதி இயற்கை எய்தினார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட அவரது உடல் யாழ். இராமநாதன் கல்லூரி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது மனைவி லேடி இராமநாதனின் விருப்பப்படி, அவரது சமாதிக்கு மேலே கருங்கல் ஆலயம் அமைத்து சிவலிங்கம் வைக்கப்பட்டது. இராமநாதேஸ்வரம் என்று அவ்வாலயத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.

சேர். பொன். இராமநாதன் நாட்டுக்கு ஆற்றிய சேவையை கௌரவிப்பதற்காக 1946 நவம்பர் 26 இல் காலிமுகத் திடலில் உள்ள பழைய நாடாளுமன்ற வளாகத்தில் அவரது உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

(21.11.2020 – சேர்.பொன். இராமநாதன் குருபூசை தினம்)

ஆக்கம்- தமிழ்வாணி (பிரான்ஸ்)
மேற்கொள்- கலாநிதி ஆறுதிருமுருகன் சொற்பொழிவு (2019)