உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் புனித ‘ரமழான்’ மாதம் தொடங்கியுள்ளது. பிறைக் கணக்கை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமான ‘ரமழான்’ முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றனர்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் மூன்றாவது கடமையான நோன்பை முஸ்லிம்கள், ‘ரமழான்’, ‘ஸெளம்’, ‘ஸியாம்’ என்றும் அழைக்கின்றனர்.
நோன்பு என்பது அதிகாலை முதல் மாலை வரை உணவு உட்கொள்ளாமல், நீர் அருந்தாமல், தீய சிந்தனைகளிலும் செயல்களிலும் ஈடுபடாமல் இருப்பதைக் குறிக்கின்றது. வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் மட்டுமன்றி ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதையும் குறிக்கின்றது.
நோன்பைப் பற்றி முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில், ‘நோன்பு (பாவங்களிலிருந்து மனிதனைப் பாதுகாக்கின்ற) கேடயமாகும். எனவே, நோன்பு நோற்றவர் தீய பேச்சுகளைப் பேச வேண்டாம்! தீய செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் ஒருவர் நோன்பு நோற்றவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது தூற்றினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறி, விலகிக்கொள்ளட்டும்!” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நோன்பு ஏழைகளின் பசியை உணர்வதற்கும், ஏழைகளுக்கு உதவுவதற்குமான பயிற்சியையும் வழங்குவதாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
இஸ்லாத்தில் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘பாழிஃ’ எனும் நன்மை, தீமையை பிரித்தறியக் கூடிய வயது முதல் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நோன்பு கடமையாகின்றது.
முதுமையிலும் நீங்காத நோய் நிலையிலும் உள்ளவர்கள், நன்மை- தீமையை பிரித்தறிய முடியாத மனவளர்ச்சிக் குன்றியவர்கள், பயணம் செய்பவர்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பு நோற்பதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாத்தில் நோன்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிகாலையில் உட்கொள்ளும் உணவும், அதற்கான நேரமும் ‘ஸஹர்’ என்றும், நோன்பை துறக்கும் நேரம் ‘இப்தார்’ என்றும் அழைக்கப்படுகின்றது.
முஸ்லிம்கள் அதிகாலை தொழுகையான ‘சுபஹ்’ நேரம் முதல் மாலை நேர தொழுகையான ‘மஹ்ரிப்’ வரை நோன்பு இருக்கின்றனர்.
‘சுபஹ்’ முதல் நோன்பு இருந்தவர்கள் சில பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு, நீர் அருந்தி நோன்பு துறப்பார்கள். இந்த நோன்பு துறக்கும் ‘இப்தார்’ நேரத்தை மகிழ்ச்சியானதும் அருள்மிக்கதுமான தருணமாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
நோன்பு துறக்கும் நிகழ்வுகளை முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாத ஏனைய சகோதர சமூகத்தவர்களுக்கும் ஏற்பாடு செய்வது ‘ரமழான்’ மாதத்தின் சிறப்பம்சமாகும். கடந்த ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் அச்சம் காரணமாக, ‘இப்தார்’ நிகழ்வுகள் குடும்பத்தினருடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
நோன்புக் காலத்தில் ‘கஞ்சி’ எனும் நீர் ஆகாரம் மிகவும் பிரபலமான உணவு. நோன்பு துறப்பதற்காக பள்ளிவாசல்களில் வழங்கப்படும் கஞ்சியை மக்கள் மாலை நேரங்களில் ஒன்றுகூடி வாங்கிச் செல்வது வழக்கம்.
பல்லின சமூகங்கள் செறிந்து வாழும் கிராமங்களில் முஸ்லிம்கள் சகோதர சமூகத்தவர்களுடன் கஞ்சியை பரிமாறி அன்பையும் பரிமாறிக் கொள்வர்.
நோன்புக் காலத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் தான தர்மங்களில் ஈடுபட வேண்டும். இதில் ‘ஸக்காத்’ என்பது முக்கியமானது. ‘ஸக்காத்’ என்றால் செல்வந்தர்கள் அல்லது வசதியுள்ளவர்கள் தமது செல்வத்தில் அல்லது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட வீதத்தை ஏழைகளுக்காக தர்மம் செய்வதைக் குறிக்கின்றது.
புனித அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது என்று முஸ்லிம்கள் விசுவாசம் கொண்டுள்ளதால், நோன்பும், ரமழான் மாதமும் மேலும் சிறப்பு மிக்கதாய் கருதப்படுகின்றது.
இந்த மாதத்தில் முஸ்லிம்கள் அல்குர்ஆனை அதிகமாக பாராயணம் செய்வதோடு, அதன் பொருள் விளங்கி, அதன்படி செயற்படவும் முயற்சிக்க வேண்டும்.
ரமழான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் இரவு வணக்கங்களிலும் தொழுகைகளிலும் ஈடுபடுவதை நன்மையான காரியமாகப் பார்க்கின்றனர். இதற்காக பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப்பட்டு, இரவு முழுவதும் திறந்திருக்கும்.
இஸ்லாமிய நாட்காட்டியின் 10 ஆவது மாதமான ‘ஷவ்வால்’ மாதத்தில் பிறை தென்பட்டதும் நோன்பு மாதம் நிறைவுக்கு வரும். ஷவ்வால் மாத முதலாம் நாளில் ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
ரமழான் எனும் நோன்பு மாதம் முழுவதும் முஸ்லிம்கள் ‘பசித்திருந்து, தாகித்திருந்து, ஏழைகளின் பசி- துன்பத்தை உணர்ந்து, தர்மம் செய்து, நல்ல காரியங்களில் ஈடுபட்டு’ பெற்றுக்கொள்ளும் பயிற்சியை ஏனைய 11 மாதங்களிலும் பின்பற்ற வேண்டும் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டலாகும்.