January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகாதேவனை பூசிக்கும் மகா சிவராத்திரி நாள்

மகாதேவனை பூசிக்கும் மகா சிவராத்திரி நாள் இன்று.

சக்திக்கு 9 ராத்திரிகள் நவராத்திரி. சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி.

சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல்வகைப் பொருள் தரும்.

நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகையான சிவராத்திரிகள் உண்டு. இதில் மகா சிவராத்திரியே மிகவும் சிறப்பான விரதமாக கடைபிடிக்கப்படுகிறது.

நித்திய சிவராத்திரி

ஒவ்வொரு ஆண்டிலும் 24 சதுர்த்தசிகள் வருகின்றன. அவை நித்திய சிவராத்திரி என்று சொல்லப்படுகின்றன.

மாத சிவராத்திரி

பெரும்பாலான சிவராத்திரிகள் அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும். ஆனால் மாத சிவராத்திரிகள் மாதத்தின் மற்ற திதிகளிலும் வரும்.

பட்ச சிவராத்திரி

தை மாதம் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் பூசை செய்வது பட்ச சிவராத்திரி ஆகும்.

யோக சிவராத்திரி

திங்கட்கிழமை முழுவதும் அமாவாசையாக வந்தால் யோக சிவராத்திரி ஆகும்.

மகா சிவராத்திரி

மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினம் மகா சிவராத்திரி எனப்படும். இந்நாள் நள்ளிரவில் சிவபெருமான் லிங்கத்தில் தோன்றியதால் இது மகாசிவராத்திரி என்று அழைக்கப்படுகின்றது. உலகில் உள்ள எல்லா லிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார்.

அன்றிரவு லிங்கத்திற்கு பூஜை செய்வது மிகவும் சிறந்தது. ஐந்து சிவராத்திரிகளும் சிவனின் ஐந்து முகங்களையும் பஞ்சபூதங்களின் தத்துவங்களையும் விளக்கும் வகையாக அமைந்துள்ளன.

லிங்கத் தோற்றம்

லிங்கத்தின் பீடமாக ஆவுடையார் அமைந்துள்ளது. இது சக்தி ரூபமாகக் காணப்படுகின்றது. லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்மாவையும் நடுப்பாகம் விஷ்ணுவையும் நுனிப்பாகம் சிவபெருமானையும் குறிக்கின்றது. லிங்கம் சிவனைக் குறிக்கும்; பீடம் கிரியா சக்தி வடிவம், லிங்கம் ஞான சக்தி வடிவமாகும்.

சைவ சமய வழிபாட்டில் மூன்று வகையான வழிபாடுகளைக் காணலாம். உருவ வழிபாடு, அருவ வழிபாடு, அருவுருவ வழிபாடு. இறைவனை உருவமாக அமைத்து வழிபடுவது உருவ வழிபாடாகும்.

உருவம் இல்லாத வழிபடுவது அருவ வழிபாடாகும். உருவம் இருப்பது போலவும் இல்லாதது போலவும் வழிபடுவது அருவுருவ வழிபாடாகும்.

அருவுருவம் என்பதே லிங்கத்தை குறிப்பது. லிங்கத்தை சிவனாக நினைத்து வழிபடும் முறை. சிவாலயங்களில் லிங்க வழிபாடு முக்கிய இடம் பெறுகின்றது.

சிவராத்திரி விரதம்

மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியில் இவ்விரதம் இருப்பவர்கள் முதல் நாள் ஒரு வேளை மதிய உணவு உண்ண வேண்டும். அடுத்த நாள் காலை சதுர்த்தசி அன்று நீராடி சிவாலய தரிசனம் செய்தல் வேண்டும்.

ஆலயத்திற்குச் செல்லும்போது அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை கொண்டு சென்று அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கு பெறலாம். ஆலயத்தில் பஞ்சாட்சரம் ஜெபிக்கலாம், அல்லது திருவாசகம் படிக்கலாம்.

விரதம் இருப்பவர்கள் இரவு நான்கு கால பூஜைகளையும் கண்டு தரிசிக்க வேண்டும். அன்று இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். பகலில் நித்திரை செய்தல் கூடாது.

அன்று முழுவதும் உபவாசம் இருத்தல் வேண்டும். உபவாசம் இருக்க முடியாதவர்கள், மருந்து சாப்பிடுபவர்கள் ஒரு நேரம் உணவு உண்ணலாம்.

இரவு முழுவதும் விழித்திருக்க முடியாதவர்கள் மூன்றாம் சாமப் பூசை வரையும் விழித்திருந்து பூசையைப் பார்த்தபின் உறங்கலாம்.

ஆலயம் செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருக்கும் சுவாமி அறையிலுள்ள சிவன் படத்துக்கு மலர் வைத்து வணங்கலாம். சிவலிங்கத்தை வீட்டில் வைத்து

வழிபடுபவர்கள் அதற்கு அபிஷேகம் செய்து, பூஜை செய்து, நிவேதனம் படைத்து வழிபட வேண்டும்.

நான்கு சாமப் பூஜைகள் செய்ய முடியாதவர்கள் லிங்கோற்பவ காலமாகிய மூன்றாம் சாமப் பூஜையாவது வீட்டில் செய்தல் வேண்டும். சிவராத்திரி அன்று ஒரு வில்வ இலையையாவது சாற்றி வழிபட வேண்டும்.

நான்கு சாம பூசைகளும் அவற்றின் முறைகளும்

முதலாம் சாமம்: பால், தயிர், நெய், கோசலம், கோமயம் இவை ஐந்தையும் கலந்த பஞ்சகௌவியத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். வில்வம் சாற்றி, தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும். வெண்பொங்கல் நிவேதித்து இருக்கு வேதம் ஓதுதல் வேண்டும்.

இரண்டாம் சாமம்: அபிஷேகம் பஞ்சாமிர்தத்தால் செய்தல் வேண்டும். சந்தனத்துடன் தாமரை மலர் சாற்றி துளசியால் அர்ச்சித்து, பாயாசம் நிவேதனம் செய்தல் வேண்டும். யசூர் வேதம் ஓதல் வேண்டும்.

மூன்றாம் சாமம்: லிங்கோற்பவ காலம் என்று சொல்லப்படும் இது மிகவும் முக்கியமான காலமாகும். இது சிவாலயங்களில் கருவறைக்குப் பின்புறமாக உள்ள லிங்கோற்பவருக்கு விசேட அபிஷேக பூஜை நடைபெறும்.

தேனால் அபிஷேகம் செய்து அரைத்த பச்சைக் கற்பூரத்துடன் சாதி முல்லை மலர் சாற்றி வில்வத்தால் அர்ச்சனை செய்தல் வேண்டும். எள் அன்னம் நிவேதித்து சாம வேதம் ஓதி வழிபட வேண்டும்.

நான்காம் சாமம்: கருப்பஞ்சாற்றில் அபிஷேகித்து அரைத்த குங்குமப்பூவுடன் நந்தியாவட்டை மலர் சாற்றி நீலோற்பவ மலரால் அர்ச்சிக்க வேண்டும்.

வெள்ளை அன்னம் நிவேதித்து அதர்வண வேதம் ஓதி வழிபட வேண்டும். இவை ஆலயத்தில் செய்யப்படும் பூசைகள் ஆகும்.

இவ்விதம் நான்கு கால பூசைகளும் முடிந்த பின் வீட்டிற்கு வந்து நீராடி சூரியன் உதித்து ஆறு நாழிகைக்குள் பாரணை செய்ய வேண்டும். பாரணை முடிந்த பின்பும் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும். மாலை 6 மணிக்குப் பின் போசனம் செய்து நித்திரை செய்தல் வேண்டும்.

புராணக் கதைகள் 

உலக முடிவாகிய ஊழிக்காலத்திலே உயிர்கள் ஒடுங்கி அழிந்தன. இரவுப் பொழுதில் உமாதேவியார் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்து இறையருள் பெற்றார்.

உமாதேவியார் இறைவனிடம் இரவு முழுவதும் விழித்திருந்து இவ்விரதத்தை அனுட்டிப்பவர்கள் மோட்சத்தை அடைய அருள் புரிக என்று வேண்டினார். அவ்வாறே சிவனும் அருளினார். இந்நாளே சிவராத்திரி தினம் என்றும் கூறப்படுகிறது.

ஒருமுறை உமாதேவியார் விளையாட்டாக சிவனின் கண்களை பின்புறமாக பொத்தியதாகவும் அப்போது உலகம் முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் தேவர்கள் அன்று இரவு முழுவதும் சிவபூஜை செய்ததாகவும் அந்த இரவே சிவராத்திரி என்று புராணங்கள் கூறுகின்றன.

ஒருவன் அறிந்தோ அறியாமலோ கூட சிவராத்திரி அன்று விழித்திருந்தால் கூட அவனுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கு ஒரு கதை உண்டு. ஒரு வேடனை புலி ஒன்று துரத்தி வந்தது.

அவன் பயந்து வில்வ மரம் ஒன்றில் ஏறிக்கொண்டான். புலியும் அந்த இடத்தைவிட்டுப் போகாமல் மரத்திற்குக் கீழே பதுங்கிக் கிடந்தது.

புலிக்குப் பயந்து கிலி பிடித்துப் போய் இரவு முழுவதும் உறங்காமல் இருந்தான். நித்திரை கொள்ளாமல் இருப்பதற்காக மரத்தில் இருந்து ஒவ்வொரு இலையாகப் பறித்து கீழே போட்டான். விடிந்ததும் புலியைக் காணவில்லை. அவ்விடத்தில் சிவலிங்கம் காட்சியளித்தது.

வேடன் கிள்ளி எறிந்த வில்வம் இலைகள் சிவலிங்கத்தின் மீது அர்ச்சனையாக வீழ்ந்தன. வேடன் அறியாமல் செய்தாலும் அது சிவலிங்க வழிபாடாக அமைந்தது.

அன்றைய தினம் சிவராத்திரி தினமாகையால் அவன் முத்தி பெற்றான். இந்த நிகழ்வு நடந்த இடம் திருவைகாவூர் எனும் புனிதத் தலம். அங்கு இன்னும் சிவராத்திரி பூசைக்கு தனிச்சிறப்பு உண்டு.

ஒரு காலத்தில் பிரம்மாவும் திருமாலும் தாமே பெரியவர் என்று தம்முள் போர் புரிந்தனர். அவர்கள் அகம் இருண்டது போல உலகமும் இருண்டது. தேவர்கள் அஞ்சி நடுங்கினர்.

சிவன் சோதிப் பிழம்பாகத் தோன்றி சுடர்விட்டு விளங்கினார். இருவரில் யார் அந்த சோதிப்பிழம்பின் அடியையும் முடியையும் கண்டுபிடிக்கிறார்களோ அவர் தான் பெரியவர் என்று கூறினார்.

திருமால் பன்றி வடிவம் எடுத்து பூமியைக் குடைந்து அடியைக் தேடிச் சென்றார். பிரம்மா அன்னப் பறவையாக உருவெடுத்து முடியைத் தேடி ஆகாயம் நோக்கிப் பறந்தார்.

இருவரும் அடிமுடி காணமுடியாது தோல்வியுற்று சிவனை சரண் புகுந்தனர். சிவன் லிங்க வடிவில் தோன்றி அவர்களுக்கு காட்சி கொடுத்த நாளே சிவராத்திரி என்று புராணங்கள் கூறுகின்றன.

செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே

                                                              (நாவுக்கரசர்)

சிவராத்திரி நாளில் இறை சிந்தனையுடன் பஞ்சாட்சரம் மந்திரம், சிவ புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், லிங்க புராணம் போன்றவற்றை படித்தும் பிறர் சொல்லக் கேட்டும் விழித்திருப்பவர்கள், முறையாக விரதம் இருப்பவர்கள் சிவபெருமானின் அருளைப் பெறுவர் என்பது ஐதீகம்.

 மலர்ந்த அயன்மால் உருத்திரன் ஈசன்
 பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
 நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
 பலந்தரும் லிங்கம் பராநந்தி யாமே   

                                                        (திருமூலர்)

                                                                                                                                                                                                                                                                        ஆக்கம்: தமிழ்வாணி (பிரான்ஸ்)