November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சங்கடங்கள் தீர்க்கும் “சங்கடஹர சதுர்த்தி விரதம்”

விநாயகர் வழிபாடு சாதி, சமயம், மொழி, இனம் என்ற பாகுபாடின்றி எல்லா மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

எல்லாம் வல்ல, தனக்கு மேல் ஒரு நாயகன் இல்லாத முழுமுதற் கடவுளே விநாயகராவர். அறுவகைச் சமயங்களில் முதன்மையுடையது காணபத்தியமே.

அவரை வழிபட்டு செய்யும் செயல்கள் தடையின்றி இனிதே முடிவுறும். எதனை ஆரம்பித்தாலும் பிள்ளையாரை வணங்கியும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதும் சைவ சமயத்தவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

ஒரு ஆலயத்திற்கு சென்றால் பிள்ளையாரை வணங்கிய பின்னரே பிற தெய்வங்களை வணங்குகிறோம். விநாயகரை எப்படி வழிபட்டாலும் ஏகாந்தமாக ஏற்றுக்கொள்வார்.

சடங்கு சம்பிரதாயங்களை விஞ்சி குழந்தையாக நம்மோடு வாழ்வில் விளையாடி வேடிக்கையாகவே வினைகளைத் தீர்த்து வைப்பதில் வல்லவர்.

வினைத் தீர்த்து வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்ற ஆன்மீகத் தாகம் கொண்டவர்களுக்கு விநாயக வழிபாடு அவசியமாகின்றது.

தன்னை முழுமையாகவே நம்பி முறையாக வழிபடுவோரை முக்காலமும் காத்து நின்று ஆன்மீகத் தாகத்தை போக்குகின்றார்.

16 செல்வங்களையும் தன் பார்வையால் நல்குவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே வெற்றி தரும் விநாயகனை வழிபடும் முறைகளையும் தத்துவங்களையும் சற்றே ஆராய்ந்து பார்க்கலாம்.

விநாயகரின் தோற்றம் பற்றி புராணங்களில் காணலாம்

விநாயகர் அவதரித்த கதை பற்றி புராணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு அவதாரத்தை அடிப்படையாகக் கொண்டு கூறப்படுகின்றன. திருஞானசம்பந்தப் பெருமான்,

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே..

இறைவனும் இறைவியும் களிறும் பிடியுமாக் தம் அன்பர்களின் இன்னல்களை அகற்றுவதற்குக் கணபதியை தந்தருளினர். இக்கதையே சுப்பிரபேதாகமம் , காஞ்சிப் புராணம், கந்த புராணம் என்பன கூறுகின்றன.

மேலும் சிவபுராணத்திலே உமாதேவியார் ஓர் மகனை விரும்பி மண்ணால் குழந்தை உருவம் செய்து உயிர் கொடுத்து சிவனும் உமையும் கொஞ்சிக் குலவினார்கள்.

அச்சமயம் தேவர்களோடு வந்த சனீஸ்வர பகவானின் பார்வை அக்குழந்தையின் மீது பட்டதால் குழந்தையின் தலை மறைந்தது என்றும் மீண்டும் சிவனருளால் பூத கணங்களால் கொண்டுவரப்பட்ட தலையைப் பொருத்தி உயிர் கொடுத்ததோடு பூத கணங்களின் தலைவனும் ஆக்கினார் என்றும் கூறப்படுகிறது.

விநாயக புராணத்தில் சிவனே விநாயகராக உருக் கொண்டதாக கூறப்படுகின்றது.

விநாயக மந்திரத்தை உமாதேவியார் சிவனிடமிருந்து பெற்று உபாசித்து வந்தார் எனவும் இதன் பயனால் ஆவணி மாதப் பூர்வபக்க சதுர்த்தியும் விசாக நட்சத்திரமும் கூடிய சோமவாரத்தில் சிங்க லக்கினத்தில் விநாயகப் பெருமான் உமாதேவியாருக்கு மகனாகப் பிறந்தார் என்றும் கூறப்படுகிறது.

மத்ஸ்ய புராணத்திலே, பார்வதிதேவியார் நீராடும் முன்பு மஞ்சள் பொடியினால் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து வைத்து நீராடினாள்.

இடையிலே சிவன் அங்கு வர பிள்ளையார் தடுத்தார் என்றும் சிவனார் அப்பிள்ளையின் தலையைக் கொய்து விட்டார் எனவும் பின் உமாதேவியார் வேண்டியதால் யானையின் முகம் பொருத்தப்பட்டு சகல ஆற்றல்களும் வழங்கப்பட்டு ஆனைமுகன் ஆக்கப்பட்டார் என்றும் அறியப்படுகிறது.

யோக சாஸ்திரங்கள் ஆறு ஆதாரங்களில் மூலாதாரத்தின் அதிதேவதையாகக் கணபதியை குறிப்பிடுகின்றன. மேலும் சோதிட நூல்களில் நட்சத்திரங்களில் உத்தராட நட்சத்திரத்தின் அதிதேவதையாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பலவாறாக விநாயகர் திரு அவதாரம் பற்றிய வரலாறுகள் காணப்படுகின்றன.

சிவனும் பார்வதியும் கூடி பிள்ளையாரை பெற்றது என்பது அகரமாகிய சிவனும் உகரமாகிய சக்தியும் கூடி நாதப் பிரணவமாகிய விநாயகர் தோற்றம் என்ற தத்துவத்தை விளக்குகின்றது.

புராணக்கதைகளில் விநாயகரது வீரதீரச் செயல்களுக்கு தகுந்தவாறும் ஞானத்தையும், நல்ல தத்துவங்களையும், உணர்த்த வேண்டி பல்வேறு உருவங்களில் அவரை யோகிகள் உருவாக்கியுள்ளனர்.

விநாயகரின் அவதாரத்தை அநேக ரூபங்களில் வடித்துள்ளனர்.

அதுபோலவே விநாயகனின் வடிவங்கள் பல்வேறு இருப்பினும் 32 வடிவங்களே முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை வருமாறு,

1. யோக விநாயகர், 2. பால விநாயகர், 3. பக்தி விநாயகர், 4. சக்தி விநாயகர், 5.சித்தி விநாயகர், 6. வீர விநாயகர், 7. விக்ன விநாயகர், 8. வெற்றி விநாயகர், 9. வர விநாயகர், 10. உச்சிஷ்ட விநாயகர், 11. உத்தண்ட விநாயகர், 12. ஊர்த்துவ விநாயகர், 13. ஏரம்ப விநாயகர், 14. ஏகாட்சர விநாயகர், 15. ஏக தந்த விநாயகர், 16. துவி முக விநாயகர் (இருமுகம்), 17. மும்முக விநாயகர், 18. துவிஜ விநாயகர (நான்முகம்);, 19. துர்கா விநாயகர், 20. துண்டி விநாயகர், 21. தருண விநாயகர், 22. இரணமோசன விநாயகர், 23. லட்சுமி விநாயகர், 24. சிங்க விநாயகர், 25. சங்கடஹர விநாயகர், 26. ஸுப்ர விநாயகர், 27. ஸுப்ர பிரசாத விநாயகர், 28. ஹரித்திரா என்ற மஞ்சள் விநாயகர், 29. திரியாட்சர விநாயகர், 30. சிருஷ்டி விநாயகர், 31. நிருத்த விநாயகர், 32. மகா விநாயகர்.

இந்த மூர்த்தங்கள் அனைத்தும் ஒவ்வொரு விசேட தன்மை கொண்டு விளங்குகின்றன. விநாயக அடியார்களில் இம்மூர்த்தங்களில் தங்களுக்கு பிடித்தமானவற்றை தொழுது வணங்கி இஷ்ட சித்திகளை பெற்றுக் கொள்கின்றனர்.

விநாயகருக்குரிய விரதங்களில் கீழ்க்கண்ட விரதங்கள் முக்கியமானவை.

குமார சஷ்டி விரதம், சித்தி விநாயக விரதம், செவ்வாய்க்கிழமை விரதம்,வெள்ளிக்கிழமை விரதம், சதுர்த்தி விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் என்பனவாகும்.

விநாயக சஷ்டி விரதம்

இவ்விரதத்தை பிள்ளையார் நோன்பு என்றும் கூறுவார்கள். கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை முதல் மார்கழி மாதம் சுக்லபட்ச சஷ்டி திதி வரை 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதமாகும்.

இவ்விரத காலத்தில் விநாயகர் அகவல், விநாயகர் புராணம், விநாயகர் காப்பு போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

சித்தி விநாயக விரதம்

புரட்டாதி மாதத்தில் சதுர்த்தியில் அனுஷ்டிக்கப்படும் விரதத்திற்கு சித்தி விநாயக விரதம் என்று கூறப்படுகின்றது.

செவ்வாய்க்கிழமை விரதம்

இந்த விரதம் தை மாதம் அல்லது ஆடி மாதம் செவ்வாய்க் கிழமைகளில் தொடங்கி ஒரு வருடம் வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அனுஷ்டிக்கப்படும் விரதமாகும்.

வெள்ளிக்கிழமை விரதம்

வெள்ளிக்கிழமை விரதம் வைகாசி மாதம் சுக்லபட்ச முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஓர் ஆண்டு அனுஷ்டிக்க வேண்டும்.

சதுர்த்தி விரதம்

ஒவ்வொரு மாதமும் பிரதமை முதல் அமாவாசை அல்லது பௌர்ணமி வரையுள்ள திதிகள் பதினைந்தும் இரண்டு முறை வருகின்றன. அவற்றுள் நான்காவதாக வரும் திதி சதுர்த்தி தினமாகும். விநாயகப் பெருமான் பிறந்த தினமும் சதுர்த்தி திதியே.

எனவே ஆனைமுகனை பூஜிக்க ஏற்ற விசேஷ தினம் சதுர்த்தி தினமாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அமாவாசைக்குப் பின் வரும் சதுர்த்தி மாத சதுர்த்தி பௌர்ணமிக்கு பின்வரும் சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி

மாதம்தோறும் வரும் தேய்பிறைச் சதுர்த்தி தினமே சங்கடஹர சதுர்த்தியாகும். மாசி மாதம் செவ்வாய்க் கிழமையில் வரும் சதுர்த்தி தினத்தில் தான் இவ் விரதத்தை தொடங்க வேண்டும்.

விரதம் இருப்பவர்கள் பகல் முழுவதும் உபவாசமிருந்து இரவில் சதுர்த்தி பூஜை முடிந்த பின் உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும்.

விநாயகருக்கு வள்ளிஇலை, மந்தாரை மலர்கள் மற்றும் அருகு என்பவற்றால் அர்ச்சனை செய்வித்து பருப்பு, நெய்யுடன் சேர்ந்து அன்னம், கொழுக்கட்டை, மோதகம் என்பவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

முறையாக இவ் விரதம் அனுஷ்டிப்பதால் சகல இடர்களும் நீங்கி எல்லா நலமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வர்.
விநாயகரை வழிபட்டால் கல்வி, ஞானம், செல்வம்,சீர், சிறப்பு எல்லாம் கிடைக்கும்.

நற் குஞ்சரக்கன்று நண்ணில் கலைஞானம்
கற்குஞ் சரங்கன்று காண் என்கிறது ஞான சாஸ்திரம்.

இன்னும்- திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவோம்..

ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக்கற்பகத்தை பேணினால் வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சக்தி தருஞ் சித்தி தருந்தான்

என்கிறார் நக்கீரர்.

எனவே இத்தகைய சிறப்புகள் உடைய விநாயகப்பெருமானை அனைவரும் அன்புடன் வணங்கி வந்தால் ‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான் நோக்குண்டாம் மேனி நுடங்காது என்றனர்’ ஆதலால் இத்தகைய வழிபாடுகளைச் செய்வோர், சகல சௌபாக்கியங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்வர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

‘மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்’

சைவப்புலவர் வை.சி. சிவசுப்பிரமணியம் (MA)
கந்தர்மடம், யாழ்ப்பாணம்

(படம்: நன்றி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கோயில் கொழும்பு)