November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முண்டாசுக் கவி ‘பாரதி’

-ஜெயசீலன் தனபாலசிங்கம் (யாழ்ப்பாணம்)

“பாரதி தமிழ்க் கவியின் குறியீடு! பாரதி தமிழ் மொழியின் வரலாறு!பாரதி தமிழ் வாழ்வுக் குவமானம்! பாரதி தமிழ் நகர்வின் வழிகாட்டி!பாரதி கிழத் தமிழை நவீனஞ்சேர்பாதையில் திருப்பி விட்ட யுகசந்தி!பாரதி பல நூற்றாண்டாய்ப் பேசியதமிழ்க் ‘கைபேசியை’ உயிர்ப்பித்த மின்னேற்றி!

பாரதி பழங் கவிதை இறுக்கத்தைத் தளர்த்திப் பாமரர் படிக்கும் படிசெய்தோன்! பாரதி தமிழ்க் கவிதை வடிவத்தை பரிசீலித்து இன்றைக் கேற்றதைத் தேர்ந்தவன்! பாரதி நெடுங் காவிய மரபினைப்பகுத்து ஆய்ந்து பல உத்தி சேர்த்தவன்! பாரதி இன்றை வசனக் கவிதையைப்படைத்துப் புதுவழி சொன்ன பிதாமகன்!

சுதந்திரக் கனல் சுடரநெய் விட்டவன். துணிந்து மானுட விடுதலைக் கார்த்தவன். புதுமைப் பெண்ணின் தளைகள் அறுத்தவன். புரட்சிக்காய்த் தன்னைத் தேய்த்திட்ட சந்தனன். விதியை மாற்ற குடும்பம் உறவெனும்விலங்குடைத்து உயர்ந்துழைத்த சுதந்திரன். எதிலும் தெய்வத்தைக் கண்டு ஓர் சித்தனாய் இயற்கையைப் போற்றி இயங்கிய ஆன்மிகம்.

“நமக்குத் தொழில் கவி நாட்டுக் குழைத்தல் இமைப்பொ ழுதுஞ் சோராதிருத்தல்”…என நிமிர்ந்து முப்பத்து ஒன்பது ஆண்டுகள் நெருப்பாய் சமூகத்தின் குப்பை கொழுத்தியோன்! திமிர்ந்த ஞானச் செருக்கோ டலைந்தவன்! தீய்த்த வறுமைக்குள் சுடர்ந்தும் ஒளிர்ந்தவன்! தமிழில் நல்ல கவிஞன் இல்லாக் குறைதன்னால் தீர்ந்ததென் றுரைத்த சுயம்பிவன்!

ஞான சூனியர் ஆகிய எம்மையேஞான சூரியர் ஆக்க முயன்றவன்! காலம் வென்ற கவிஞன்…மனிதர்கள்கட்டிக் காத்த மடைமை தகர்த்தவன்!யான் மனத் தடையால் கவி வார்த்தைகள்வற்றி நிற்கையில்…வார்த்தைகள் தாறவன்! நாளை…கனவு மெய்ப்பட வேணும்மென்று ஆர்த்தவன் கனாமெய்ப்பட லாச்சுதா?

காலனை எட்டிக் காலால் உதைக்கவும் கருதியோன் அன்புக்கு அடிமையாம் காதலன்!கோயில் யானையே கூற்றெனத் தாக்கிடகுற்று யிருடன் துடித்து உறவழக்கால மானவன் நாலைந்து பேருடன்கடைசி யாத்திரை சென்ற கற்பூரன்.. ஆம்பாரதி…எங்கள் காற்றில் கரைந்துளான்! தமிழ்ப் பரம்பரைக்கு மூச்சாய் உசுப்புவான்!

சுப்பிரமணிய பாரதியார்

-தமிழ் வாணி (பிரான்ஸ்)

“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பாடலுக்கு பொருத்தமாக இருந்தவர் சுப்பிரமணிய பாரதியார். ஒரு எழுத்தாளனாக, பத்திரிகை ஆசிரியராக, தமிழ்க் கவிஞனாக, புரட்சிக் கவிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, விடுதலை போராட்ட வீரனாக, எல்லாவற்றிற்கும் மேலாக மகாகவியாக போற்றப்படுபவர்.

இருபதாம் நூற்றாண்டின் ‘மாபெரும்’ கவிஞராகத் திகழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார்.தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வாழ்ந்த சின்னச்சாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் அருந்தவப்புதல்வனாக 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் பிறந்தார். சுப்பிரமணியம் என்ற அழகிய பெயர் கொண்டவர். ஐந்து வயதில் அன்னையை இழந்தார்.

சிறுவயதிலேயே கவிதைகள் எழுதும் ஆற்றல் கொண்டு 11 வயதில் கவி பாடும் திறமையைப் பெற்றார். 1893இல் சிறுவயதில் கவி மழை பொழிய கண்ட எட்டயபுர மன்னர், அவரது சமஸ்தானப் புலவர்கள் அவையில் சுப்பிரமணியத்துக்கு கலைமகள் எனப் பொருள் விளங்க “பாரதி”

என்னும் பட்டத்தை நல்கினார்.1894-1897 வரை நெல்லை இந்துக் கல்லூரியில் உயர் கல்வி கற்றார். 1897 இல் தனது 15ஆவது வயதில் ஏழு வயதான செல்லம்மாவை மணம் புரிந்துகொண்டார். 1898 தந்தை இறந்ததும் அவரது அத்தையார் குப்பம்மாள் ஆதரவுடன் காசிக்குச் சென்று அங்கு வடமொழி, ஹிந்தி ஆகியவற்றை கற்றுத் தேர்ச்சி பெற்றார்.

பத்திரிகைத் தொழில்

1902 ஆம் ஆண்டு மன்னரின் அழைப்பை ஏற்று எட்டையபுரம் வந்து அரசவைக் கவிஞரானார். சில காலத்தில் மதுரையில் இருந்து வெளிவந்த விவேகபானு என்ற பத்திரிகையில் “தனிமை இரக்கம்” என்ற அவர் முதல் பாடல் வெளிவந்தது.1904இல் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் 3 மாத காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

அதை விட்டு வெளியேறி சுதேசமித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக கடமையாற்றினார். தமிழ், ஆங்கிலம், வடமொழி, வங்காள மொழி, பிரெஞ்சு மொழியில் புலமை பெற்று பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்த்தார்.

தாய்நாட்டின் மீதும் தாய்மொழியாம் தமிழ் மீது பற்று கொண்ட பாரதி “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று தமிழையும், “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்று தாய் நாட்டையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.“சக்கரவர்த்தினி” என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பாரதியார் பணியாற்றினார். அப்பத்திரிகையில் “வந்தே மாதரம்” பாடலை தமிழில் பெயர்த்து எழுதினார்.

தேச எழுச்சி

1905இல் வ. உ. சிதம்பரனாரின் தொடர்பு ஏற்பட்டது. பாரதியார் பக்தி பாடல்கள், தேசபக்தி பாடல்கள், எழுச்சிப் பாடல்கள் என்று பல பாடல்களை எழுதினார். 1906 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்பொழுது சுவாமி விவேகானந்தரின் சிஷ்ஷையாக நிவேதிதா என்ற பெயரில் இருந்த மார்க்கிரெட் நோபிள் என்ற ஆங்கிலப் பெண்ணை பாரதியார் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவரது சந்திப்பு பாரதியாருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நிவேதிதாவை தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார்.

1907 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் இந்தியா என்ற வார இதழ் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு ஆரம்பமாகியது. வ.உ.சிதம்பரனார் புதிய கப்பல்களை வாங்கியபோது அது பற்றிய செய்தியை 1907 ஆம் ஆண்டு மே 25ஆம் திகதி இந்தியா பத்திரிகையில் வெளியிட்டார்.

பாலகங்காதர திலகரின் தீவிரவாதக் கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்தார். 1908 ஆம் ஆண்டில் ‘சுதேச கீதங்கள்’ என்னும் பாடல் தொகுதியை வெளியிட்டார். அச்சு வடிவில் வெளிவந்த அவரது முதல் நூல் இதுவாகும். அரவிந்தர், பாலகங்காதர திலகரின் நட்பு அவருக்கு கிடைத்தது. தமது கட்டுரைகள், பாடல்கள் மற்றும் அரசியல் விடுதலை பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார்.

சிறைவாசம்

பொலிஸார் அவரை கைது செய்ய இருப்பதை அறிந்து அவரை நண்பர்கள் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தனர். புதுச்சேரியில் இருந்த படியே ‘இந்தியா’ பத்திரிகையை நடத்தினார். மக்களின் ஆதரவு பெருகி வந்ததால் அரசு ‘இந்தியா’ பத்திரிகையை தடை செய்தது. பத்திரிகை தடை செய்யப்பட்டதால் பாரதியாரின் இரண்டாம் கவிதைத் தொகுதி “ஜன்மபூமி” வெளியானது.

1912ல் அவரது பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற கவிதை நூல்கள் பிரசுரமாயின. பகவத்கீதையை தமிழில் மொழிபெயர்த்தார். 1914இல் புதுச்சேரியில் நெருக்கடிகள் ஏற்பட்ட நிலையில் தேசபக்திப் பாடல்களைக் கொண்ட “மாதா மணிவாசகம்” என்ற நூல் தென்னாபிரிக்காவில் நேடாலில் பிரசுரமாகியது.

1918இல் பாரதியார் பாண்டிச் சேரியை விட்டு புறப்பட்டு வரும் வழியில் கடலூர் அருகே கைது செய்யப்பட்டார். ஒரு மாதம் சிறையில் இருந்து விடுதலையானார். அங்கிருந்து மனைவியின் ஊரான கடையம் சென்றார். வறுமையின் பிடியில் வாடினார். எட்டையபுர மன்னரின் உதவியைக் கோரினார்.

வறுமை

மகள் தங்கம்மாளின் திருமணத்துக்கு பணம் இல்லாமல் வருந்தினார். எட்டையபுரம் ஜமீன்தாரிடம் இருந்து 50 ரூபா மட்டும் வந்தது. ஆண்டிப்பட்டி ஜமீன்தார் ஆயிரம் ரூபா அனுப்பி வைத்தார். மகளின் திருமணத்தை ஒருவாறு முடித்து வைத்தார்.

1920இல் மீண்டும் சுதேசமித்திரனில் துணை ஆசிரியர் பணியை ஏற்றார். 1921 ஆம் ஆண்டு திருவேலிக்கேனியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு வழிபடச் சென்றார். அங்கு அர்ஜுனன் என்ற கோயில் யானைக்கு பழம் கொடுக்க சென்றார். யானை மதம் பிடித்து இருந்தது அவருக்கு தெரியவில்லை.

யானை அவரைத் தாக்கியது. அதனால் நோய்வாய்ப்பட்டார்.அப்போது பாரதிதாசன் அவர் உடல் நிலையை கேட்டறிந்தார். தான் நலமாக இருப்பதாக பாரதியார் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். அதனை நம்ப மறுத்த பாரதிதாசன் புகைப்படமெடுத்து அனுப்பும்படி கடிதம் எழுதினார். பாரதியாரும் 1921 ஜூலை மாதம் புகைப்படம் எடுத்து அனுப்பினார்.

கடைசி நாட்கள்

சில நாட்கள் சென்றபின் பாரதியார் மீண்டும் நோய்வாய்ப்பட்டார். அஞ்சா நெஞ்சனாக, விடுதலை வீரனாக, பெரும் கவிஞனாக வாழ்ந்த பாரதியார் 1921 செப்டம்பர் 11ம் திகதி அமரத்துவம் அடைந்தார். பாரதியாரின் பாடல்களை பாரதம் புறந்தள்ளிய காலம், ஈழம் தந்த விபுலானந்த அடிகள் பாரதத்தில் பாதச் சுவடுகள் பதித்த பின்னர் அவரின் பாடல்களை பல்கலைக்கழகம் வரை கொண்டு சென்றார். அதனால்தான் பாரதியின் பாடல்களை எவராலும் அழிக்க முடியவில்லை.

இன்று அவரின் பாடல்கள் பாரெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பாரதியாரின் முண்டாசும் முறுக்கு மீசையும், நெற்றித் திலகமும், தீர்க்கமான பார்வையும் என்றும் எம்மனக்கண் முன்னே பாரதியார் வாழ்ந்து கொண்டேதான் இருக்கின்றார் என்ற உணர்வை கொடுக்கின்றது.

தமிழ்க் கவிதையில் மரபை மாற்றி, புதுக் கவிதையை புகுத்தி, பாமர மக்கள் தொடக்கம் பேரறிஞர் வரை கேட்க வைத்த அந்த மகாகவியின் நாமம் பூமி உள்ளவரை வாழும்.

“பார் மீது நான் சாகாதிருப்பேன்” (பாரதி)

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்!