அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
(கம்பர்)
அனுமன், மாருதி, வாயுபுத்திரன், கேசரி மைந்தன், அஞ்சனை மைந்தன், சுந்தரன், இராமநாதன், இராமபக்தன் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தாகும்.
தேவர்கள் பூவுலகு வருகை
பூவுலகம் தவிப்பதைக் கண்ட பூமாதேவி மனம் வருந்தி சிவனிடம் செல்கின்றாள். சிவன் பிரம்மாவிடம் செல்லும்படி கூற அங்கு செல்கின்றாள். பிரம்மா அவளை அழைத்துக்கொண்டு நாராயணனிடம் சென்றார்.
நாராயணன் பூமாதேவியைப் பார்த்து வருந்தாதே தேவி பூமியில் நீதியை காக்க தர்மம் நிலைக்க நான் இராமனாக அவதாரம் செய்வேன். பிரம்மாவின் அம்சமாக சாம்பவான் உதிப்பார்.
சிவனின் அம்சமாக அனுமன் உதிப்பான். இந்திரன் அம்சமாக வாலியும், அக்கினி பகவான் அம்சமாக நீலனும், சூரிய பகவான் அம்சமாக சுக்ரீவனும், குபேந்திரன் அம்சமாக அங்கதனும், அவதாரம் செய்வர். மற்றைய தேவர்கள் வானரமாக அவதாரம் எடுப்பர் என்று நாரயணன் கூறினார்.
பிரசாதம் பெற்ற அஞ்சனை
ஒரு முனிவரின் சாபத்தால் பூமியில் குஞ்சரனுக்கு மகளாகப் பிறந்த அஞ்சனை வானர அரசனான கேசரியை மணம் புரிந்தாள்.
நீண்ட காலம் குழந்தை இல்லாததால் சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தாள். அஞ்சனையின் தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமானிடம் வரம் ஒன்று கேட்டாள்.
முனிவரால் கிடைத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற சிவபெருமானே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று சிவனை வேண்டினாள். அயோத்தி மன்னன் தசரதச் சக்கரவர்த்தி குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார்.
அக்கினி பகவான் அருளினால் யாககுண்டத்தில் இருந்து பாத்திரம் ஒன்று தோன்றியது. அரசன் அதை எடுத்து தன் மூன்று மனைவிகளுக்கும் பகிர்ந்து கொடுத்தான்.
மிகுதியாக இருந்த சிறிதளவு பாயாசப் பாத்திரத்தை பருந்து ஒன்று எடுத்துச் சென்று ஒரு இடத்தில் போட்டுவிட்டுச் சென்றது.
சிவனின் உத்தரவின்படி வாயு பகவான் அதை அஞ்சனையின் கைகளில் விழுமாறு செய்தார். அதைக் கண்ட அஞ்சனை மகிழ்ந்து அந்த சிறிய அளவு பாயாசத்தை அருந்தினாள். அப்போது சிவபெருமானின் அருளை உணர்ந்தாள்.
ஆஞ்சநேயர் அவதாரம்
சிவனின் அருளால் சிவபெருமானின் அவதாரமாக ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
அக்குழந்தை மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதாரம் செய்தது. குரங்கு முகம் கொண்டதாக இருந்த குழந்தையை தாய் அணைத்து மகிழ்ந்தாள்.
வாயு பகவானின் மைந்தன் என்பதால் பலம் உள்ளவனாகத் திகழ்ந்தார். அஞ்சனை மைந்தன் என்பதால் அனுமன் என அழைக்கப்பட்டார்.
சூரியனை பழம் என நினைத்தார்
குழந்தையாய் இருந்த அனுமனுக்கு மிகுந்த பசி ஏற்பட்டது. வானில் சிவப்பு நிறத்தில் சூரியன் உயர்ந்து வருவதை அனுமன் கண்டான். பழம் என நினைத்து அதை சாப்பிட வானில் தாவினார். இந்திரன் தேவர்களின் தலைவன் தனது வஜ்ராயுதத்தால் முகத்தில் தாக்கினார்.
அனுமன் உடைந்த தாடையுடன் பூமியில் வந்து மூர்ச்சித்து விழுந்தார். கோபமடைந்த வாயுபகவான் காற்றை நிறுத்தி விடுகிறார். உயிரினங்கள் துன்பம் அடைந்தன. சிவபெருமான் அருளால் அனுமன் எழுந்தான்.
இந்திரனின் வஜ்ராயுதத்தால் தீங்கு ஏற்படாது எனவும் வாயுபகவான் காற்றினால் தீங்கு ஏற்படாது எனவும் வருணன் நீரால் தீங்கு ஏற்படாது எனவும் வரமளித்தனர்.
பிரம்மா அனுமன் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்லவும் அவரை யாரும் தடுக்க முடியாது என்று வரமளித்தார். விஷ்ணு கதாயுதம் வழங்கினார்.
அனுமனின் உடல் மிகவும் வலிமையாக இருக்குமென வரமளித்தார். இந்த வரங்களினால் அனுமன் ஒரு சிரஞ்சீவியாகவும் பலம் கொண்டவராகவும் மாறினார்.
அனுமன் இராமன் சந்திப்பு
இராமனும் இலக்குவனும் சுக்கிரீவன் இருப்பிடத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும் போது அவரை யாரென அறிந்து வரும்படி சுக்கிரீவன் அனுமனை அனுப்புகிறான்.
இராமன் இலக்குமணன் அந்தண வேடத்தில் இருந்ததைக் கண்ட அனுமன் அவர்களை வினவுகிறான்.
அவர்கள் யார் என அறிந்ததும் இராமன் காலில் விழுந்து தன்னை அனுமன் எனக் கூறுகிறான்.
இராமன் அனுமனைக் கட்டித்தழுவுகிறார். அப்போது தொடங்கிய இராம-அனுமன் நட்பு எப்போதும் நிலைத்து நிற்கிறது. அனுமன் இதயத்தில் எப்போதும் ஒளிவீசி நிற்கின்றார்
இராமாயணத்தில் அனுமன்
இராமாயணத்தில் சுந்தர காண்டம் சுவையான ஒரு பகுதியாகும் சுந்தரகாண்டத்தின் கதாநாயகன் அனுமன் ஆவார்.
இராமனை பிரிந்து வாடும் சீதையைக் காண வான் மார்க்கமாக கடல் கடந்து இலங்கை செல்கிறார். அசோகவனத்தில் சீதையைக் கண்ட இராமன் அடையாளமாக களையாழியை கொடுக்கிறார். இலங்கை வேந்தன் இராவணனை சந்திக்கிறார்.
சீதையை விட மறுத்தால் இராமன் போர் தொடுக்கும் நிலை ஏற்படும் என்பதை தூதுவனாக வலியுறுத்தினார்.
சீற்றம் கொண்ட இராவணன் அனுமன் வாலில் தீ வைக்க அங்கிருந்து தப்பிய அனுமன் இலங்கை தலைநகரை வாலில் இருந்த தீயால் சாம்பலாக்கி இலங்கையை விட்டு திரும்புகிறார்.
இராமனிடம் “கண்டேன் சீதையை” என்று நற்செய்தியை கூறுகிறார். இராம இராவண யுத்தம் மூழ்கிறது.
போரில் சஞ்சீவி மலையை தனது கரத்தால் தூக்கி வந்து போரில் மயக்கமுற்றவர்களுக்கு மூலிகையாக கொடுத்து காப்பாற்றுகிறார்.
இராமனின் தூதுவனாக மட்டுமல்ல இராம பக்தனாக அனுமன் செயல்பட்டார்.
அனுமன் தனது உண்மையான பக்தியை உலகிற்கு உணர்த்த தனது மார்பை திறந்து காட்ட அதில் அவரது இதயத்தில் இராமர் சீதை வீற்றிருக்கும் காட்சியைக் காட்டி ஆனந்தம் கொண்டார்.
மகாபாரதத்தில் அனுமன்
மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேரில் பறக்க விடப்பட்ட கொடியில் அனுமனின் திரு உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
கண்ணன் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்த பொழுது அனுமன் கொடி வழியாக கேட்டதாக கூறப்படுகிறது. போர் முடிந்து கண்ணனும் அர்ஜுனனும் தேரில் இருந்து இறங்கியதும் அனுமனுக்கு நன்றி கூற அனுமன் சுயரூபத்தைக் காட்டி விட்டு மறைந்தார்.
அவர் மறைந்தவுடன் தேர் எரிந்து சாம்பலானதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் போர் ஜெயிப்பதற்கு தானும் அனுமனும் தான் காரணமாக இருந்ததாகக் கூறுகிறார்.
அனுமன் பெருமை
அனுமனுக்கு விஷ்ணு கோவில்களில் சந்நிதானம் உண்டு. மகாவிஷ்ணுவின் பெரிய திருவடிகளுடன் ஆகும்.
அதுபோல சிறிய திருவடி என்று அனுமன் அழைக்கப்படுகிறார். இராமபிரானை எந்நேரமும் நினைத்தபடி ஸ்ரீராமஜெயம் கூறும் பக்தனாக அனுமன் திகழ்கிறார்.
அனுமன் வழிபாடு அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றி வழிபடுவர். சுந்தரகாண்டம் தொடர்ந்து யார் பக்தியுடன் படிக்கிறார்களோ அந்த இடத்தில் அனுமன் வந்து அமர்ந்து கேட்டு மகிழ்வார் என்பது எல்லோராலும் நம்பப்படுகிறது.
அனுமனின் வாலில் பொட்டு வைத்து 48 நாட்கள் வழிபட்டால் நினைத்த காரியம் நிச்சயம் பலிக்கும் அனுமனை வழிபட்டு அவர் அருள் பெறுவோமாக!
-தமிழ்வாணி (பிரான்ஸ்)