January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

19 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஆப்கான் போதைப் பொருட்கள் குஜராத்தில் மீட்பு; சென்னையை சேர்ந்த தம்பதி கைது!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 19,000 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சென்னையில் ஒரு தம்பதியை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஒரு கொள்கலனில் 2,000 கிலோகிராம் ஹெரோயினும் மற்றொன்றில் 1,000 கிலோகிராம் ஹெரோயினும் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த 40 டன் எடையுள்ள கொள்கலன்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பகுதியளவு சவர்க்காரம் இருப்பதாக கொள்கலன்கள் தொடர்பான ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தினங்களுக்கு முன்பே இரகசியமான முறையில் சென்னையை சேர்ந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாலிபன்கள் ஆப்கானில் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அங்கிருந்து இந்த போதைப்பொருட்கள் இரானுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பின்னணி தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.