January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மோடி தலைமையில் ‘பிரிக்ஸ்’ மாநாடு: ஆப்கான் விவகாரம் தொடர்பில் ஆலோசனை

Photo: MFA Russia/Twitter

வன்முறையற்ற முறையில் நிலைமையை சரிசெய்ய ஆப்கானிஸ்தானுக்கு பிரிக்ஸ் நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென்ஆப்ரிக்கா, சீனா ஆகிய 5 நாடுகளின் அமைப்பான பிரிக்ஸின் 13 ஆவது மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.

இதன்போது, பேசிய இந்திய பிரதமர், பயங்கரவாத எதிர்ப்பு திட்டத்தை பிரிக்ஸ் நாடுகள் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஆப்கானிஸ்தானில் அமைதிக்கு வழிவகுக்கும் தீர்மானம் பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் மிக முக்கியமாக வன்முறையற்ற முறையில் நிலைமையை சரி செய்ய ஆப்கானிஸ்தானுக்கு தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

காபூலில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு பிரிக்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஆப்கானிஸ்தானில் அமைதி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை உறுதி செய்ய பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ‘ஆப்கானிஸ்தானின் உள் விவகாரங்களில் இருந்து உலக நாடுகள் விலகி நிற்பதாகவும், அவர்களது இறையாண்மையை மதிப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் ஆப்கானிஸ்தான் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது எனவும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கியதே அங்கு புதிய பிரச்சனை உருவாக முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது உலக நாடுகளின் பாதுகாப்பை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவாக அறிய முடியவில்லை எனவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.