November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியா-பாகிஸ்தான் பேச்சு தொடராமல் போனதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பே காரணம்’; இம்ரான் கான்

(Photo: Faraz Khan/Twitter)

இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தொடராமல் நின்று போனதற்கு ஆர்.எஸ். எஸ் அமைப்பின் கொள்கை தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் மத்திய ஆசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 250 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மத்திய ஆசிய மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், அங்கு செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,

”இந்தியாவுடன் ஒரு முதிர்ச்சியடைந்த நல்ல அண்டை நாடாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் விருப்பம்.

ஒரு சுமுகமான பேச்சுவார்த்தைக்காக தான் நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறோம்” என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை இடையில் நின்று போனதற்கு ஆர்.எஸ்.எஸ் கொள்கைதான் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இம்ரான் கானின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்,

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பாகிஸ்தான் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது எனவும், காஷ்மீரில் தீவிரவாதத்தை வளர்த்து விட்டு, அந்த பகுதியை துண்டித்து விட வேண்டும் என்ற பாகிஸ்தானின் எண்ணமே அனைத்துக்கும் தடையாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஒரு சூழலில் பேச்சுவார்த்தை எப்படி நடைபெறும் என கேள்வி எழுப்பியுள்ள சஞ்சய் ராவத், இம்ரான் கானின் பேச்சு கண்டிக்கத்தக்கது எனவும் பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விமர்சிப்பது இது முதல் முறையல்ல எனவும் சாடியுள்ளார்.