July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை’: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

இன்று (21) 16 ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தமிழ் இனிமையான மொழி என புகழ்ந்த ஆளுநர், எளிமையான வாழ்க்கையை வாழுமாறும் மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

ஆளுநர் தனது தொடக்க உரையிலேயே இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என தமிழ் நாடு சட்டப் பேரவையில் தெரிவித்தார்.

அதேபோல் இலங்கையிலுள்ள ஈழத் தமிழர்களுக்கு சம குடியுரிமை, அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு , இந்திய அரசுக்கு  வலியுறுத்தப்படும் என ஆளுநர்  தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக நீதி, சமத்துவத்தை அடித்தளமாக கொண்ட அரசாக இந்த அரசு செயல்படும். பெரியார் காண விரும்பிய சுயமரியாதை சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும் எல்லா வளமும் கொண்ட மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதி ஏற்றுள்ளது என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாரபட்சமின்றி மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படும் எனவும் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை இந்திய அரசு பரிசீலித்து நிறைவேற்றும் என நம்புகிறேன் எனவும் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

மாநில சுயாட்சி இலக்கை எட்ட தமிழக அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசிடம் தமிழக அரசு வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் அதை இந்த அரசு உறுதி செய்யும்.

இதேவேளை ‘பழங்காலக் கோட்டைகளும், அரண்மனைகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பாரம்பரிய சுற்றுலா ஊக்குவிக்கப்படும்.

தொழில் நிறுவனங்களின் பணியாளர்களால் செலுத்தப்படும் தொழில் வரியை செலுத்த 3 மாத காலம் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படும் என ஆளுநர் கூறியுள்ளார்.

அனைவரின் ஆலோசனையையும் ஏற்று மாநிலத்தில் உள்ள பெருநகரங்களில் நெருக்கடியை குறைப்பதற்காக துணை நகரங்கள் உருவாக்கப்படும். எல்லா வளமும் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற இந்த அரசு உறுதி ஏற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 335 கோடி வரப்பெற்றுள்ளது.

அந்த தொகையில் இருந்து கொவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 50 கோடி ஒதுக்கப்படும் எனவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.