November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்ததால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது’: தமிழக முதலமைச்சர்

மக்கள் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்ததால் தான் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.

‘அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இரண்டு வார காலத்தில் அனைத்தும் கட்டுக்குள் வந்திருப்பதாகவும், ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியதால் தான் கொரோனா பரவல் குறைந்திருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் எனவும், முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தொற்று பரவலை தகர்க்கும் வல்லமை மக்களுக்கு உள்ளது, பொது போக்குவரத்து விரைவில் இயக்கப்பட வேண்டும்,பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசின் விதிகளை பின்பற்றி நடந்து கொண்ட மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி எனவும் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில் 15 ஆயிரத்துக்கும் கீழ் தொற்று பதிவாகி உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.