கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை முற்பகல் 12 மணி வரையிலுமே திறந்திருக்க முடியும்.
மேலும் உணவகங்கள், பேக்கரிகள் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் முற்பகல் 10 மணி வரையிலும், அதன் பின்னர் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கலாம்.
தேநீர் கடைகளும் அனைத்து இறைச்சி, மீன், கோழிக்கறி கடைகளும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 12 மணி வரையிலுமே திறந்திருக்க முடியும்.
தேநீர் கடைகளிலும் பார்சல் வழங்க மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு திறப்பதற்கு அனுமதி வழங்கப்படாது.
அத்துடன் திரையரங்குகள், கலாசார செயல்பாடுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டு, திருவிழாக்கள் எதற்கும் அனுமதி வழங்கப்படாது.
அத்தோடு இன்று முதல், 20 ஆம் திகதி வரை, அனைத்து அரசு அலுவலகங்களும், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்குவதுடன் அரசு ஊழியர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என, சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.
அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள் வழக்கம் போல் செயற்படும்.
தமிழகத்தில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.