தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவி ஏற்பு நிகழ்வை நடத்தவுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
திமுகவின் வெற்றி உறுதியானதை தொடர்ந்து நேற்று இரவு மு.கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின் அங்கு தனது தேர்தல் வெற்றி சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்டாலின், ”மிகப்பெரிய வெற்றியை திமுகவுக்கு மக்கள் அளித்துள்ளனர், கலைஞர் கருணாநிதியின் வழிநின்று சிறப்பான ஆட்சியை தருவோம்” எனக் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதன்படி 7 ஆம் திகதி ஆளுநர் மாளிகையில் அந்த நிகழ்வை நடத்தவும் அதற்கு முன்னர் திமுக கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினத்தில் அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆரம்பத்தில் பதவியேற்பு நிகழ்வை நேரு உள்ளக அரங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும், தற்போதைய கொவிட் நிலைமைகளை கருத்திற் கொண்டு அந்த நிகழ்வை எளிமையான முறையில் ஆளுநர் அலுவலகத்திலேயே நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.