January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சிப் பீடம் ஏறும் திமுகவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் கட்சிக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன்படி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘தமிழக தேர்தலில் திமுக வெற்றிப்பெற்றுள்ளமைக்கு அதன் தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்’ என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் திமுகவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திமுகவின் வெற்றிக்கு இலங்கையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து

நடைபெற்று முடிந்த தமிழ்நாட்டு தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தி.மு.க தலைவர் மு.க. ஸ்ராலின் அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இலங்கையின் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு தருவார் என்று நம்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வாழ்த்து 

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன்,இலங்கையில் புரையோடி போயுள்ள இனப் பிரச்சினைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் தீர்வை வழங்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மு.க. ஸ்டாலின் இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் எனவும் தி.மு.க. வின் வெற்றி இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள வெற்றியாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா வாழ்த்து 

திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சி என தெரிவித்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா,இலங்கைத் தமிழினமும், தமிழர் தேசமும் விடுதலை பெறுவதற்கும் அனைத்துக் கட்சிகளுடனும் மத்திய அரசுடனும் இணக்கம் கொண்டு செயற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வாழ்த்து

தமிழக ஆளும் கட்சியை, தமிழக முதல்வரை வாழ்த்தி வரவேற்போம் என தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்,தமிழக தேர்தல் முடிவுகள் இன்று.
அதில் நேரடியாக தலையிட, நாம் அங்கே வாக்காளர்கள் அல்ல. ஆனால் அதுபற்றி நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது.தமிழக உடன் பிறப்புகள் தரும் முடிவை ஏற்று அதை எப்படி எமக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை மட்டுமே நாம் கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து

திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் வெற்றி இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினரின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்க்கும், திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

அதற்கமைய எனது தந்தை ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததை நன்றியோடு நினைவு கூறுகின்றேன்.

ஆகவே கடந்த காலங்களில் திமுகவுடன் உள்ள உறவை மேலும் கட்டியெழுப்பி நட்போடு பயணிப்பதே தமது எதிர்பார்ப்பு என ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.