January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாளை வாக்கு எண்ணிக்கை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெற்றி யாருக்கு?

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன.

கொரோனா பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் 5 மாநிலங்களிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவம், உள்ளூர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 14, அதிகபட்சம் 28 என மொத்தம் 3,372 மேசைகள், தபால் வாக்குகளுக்கு 739 மேசைகள், சேவை வாக்காளர்களுக்கு 309 மேசைகள் என 4,420 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தமிழகத்தில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலில் 72.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அத்துடன் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 12 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 76 மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை 76 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் கடமையாற்ற உள்ளனர்.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.

அதன்பின் 8.30 மணி அளவில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுக்களாக எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

நாளை வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் காலை 11 மணிக்கு தெரியவரும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அதே நேரம் அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை முதல் நள்ளிரவைத் தாண்டியும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடத்தப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா,அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது.