
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, புதிதாக 3,60,960 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,79,97,267 ஆக உயர்ந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு அங்கு கொரோனாவால் ஒரே நாளில் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில், வெகுஜன கூட்டங்கள், தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் புதிய கொரோனா தொற்று என்பவற்றின் காரணமாக கொரோனா 2 வது அலை “பாரிய புயல்” உருவாகியதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
அத்தோடு இந்தியாவில் வெகுவாக அதிகரித்த கொரோனா தொற்றுக்கு புதிய கொரோனா வைரஸ் மட்டுமே காரணம் அல்ல எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. நாட்டின் சுகாதார அமைப்புகளின் எச்சரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 29,78,709 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 16.55% ஆக அதிகரித்துள்ளது.
எனினும் கொவிட் -19 நோயாளிகளில் சுமார் 15% பேருக்கு மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தேவை என்று வலியுறுத்தியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம், வீட்டிலேயே குணமடையக் கூடிய தொற்றாளர்களும் பீதியில் மருத்துவமனைகளுக்கு செல்வதால் இந்தியாவின் சுகாதாரத் துறைக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து 35% க்கு மேல் உயர்ந்துள்ளது.அதேநேரத்தில் மேற்கு வங்காளத்தில் மாநில தேர்தல் காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அங்கு கொரோனா தொற்று விகிதம் கிட்டத்தட்ட 50% என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த சதவிகிதம் 82.33% ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஒக்ஸிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் நாடு கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது. உலக நாடுகள் பலவும் தமது உதவிகளை வழங்கிவரும் நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் 4,000 ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை இந்தியாவுக்கு அனுப்புவதாகவும், 2,000 க்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்களை இந்தியாவின் தொற்றுநோய் புயலிலிருந்து மீட்கும் முயற்சிகளுக்கு உதவ மீண்டும் அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 2,61,162 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,48,17,371 ஆக உயர்ந்துள்ளது.