(Photo/NewIndian/Twitter)
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை )முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு அமுலுக்கு வருகிறது.
அதற்கமைய எதிர்வரும் நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதுடன் இரவு நேரங்களில் பேருந்துகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி போன்றவை அனுமதிக்கப்படும்.
அதேநேரம், இரவு நேர ஊரடங்கு முழுமையாக அமுல்படுத்துவதை உறுதி செய்ய பொலிஸார் ரோந்துப்பணியில் ஈடுபடவுள்ளதுடன், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள இரவுநேர ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பயணிகள் இந்தியாவுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பூசி குறித்தும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.