
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், வழக்கு குறித்த முக்கிய தீர்ப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தில் தலைவராக பணியாற்றும் போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ரூ .3.7 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெண்டி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் சாட்சி விசாரணைகளின்றி தமது சேவை பெறுநரான மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை பரிசீலித்த கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரை சாட்சிகளை அழைக்காமல் வழக்கிலிருந்து விடுவிப்பதா? இல்லையா? என்ற தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தார்.