இஸ்ரேல் – காஸா இடையே போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில், 120 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.
இதேவேளை கனடா, இங்கிலாந்து, இத்தாலி, இந்தியா, ஜெர்மனி மற்றும் உக்ரைன் உள்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும், காஸா பகுதிக்குள் அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை தொடர்ந்து தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஹமாஸ் இயக்கதால் பிடித்துச்செல்லபட்ட பணயக்கைதிகள் அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இந்த மாதம் மோதல் தொடங்கியிலிருந்து இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.