May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை காஸாவுக்கு நீர், மின்சாரம் கிடையாது” – (Update)

இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினால் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை விடுவிக்கும் வரையில் காஸாவுக்கு நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் இடம்பெறாது என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் மின்சாரத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் இயக்கம் அங்கு இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடமொன்றில் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி பலரை கொன்றதுடன், நூற்றுக் கணக்கானோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது.

இவர்களில் 150 பேர் வரையிலானோர் காஸாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவலல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை விடுவிக்க இஸ்ரேல் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், எச்சரிக்கை இல்லாமல் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களைத் தொடங்கினால் கடத்தப்பட்டவர்களைக் கொன்றுவிடுவோம் என்று ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் காஸாவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள இஸ்ரேல் இராணுவம் காஸாவுக்கான நீர், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை தடை செய்துள்ளது.

அங்கு ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையமே இருந்த நிலையில், எரிபொருள் இல்லாமையினால் அது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் காஸா முழுமையாக இருளில் உள்ளதுடன், இலட்சக் கணக்கான மக்கள் மின்சாரம், எரிபொருள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீர், மின்சாரம், எரிபொருள் விநியோகம் வேண்டுமென்றால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஹமாஸுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை காஸாவில் புதிய தாக்குதலைத் தொடங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை எல்லைகளில் குவித்துள்ளது. இதுவரை வான் வழியாக மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில் விரைவில் காஸா பகுதியில் தரை வழி தாக்குதல்களை நடத்தவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் காஸாவில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் அங்குள்ள மக்களுக்கு அறிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலிய குண்டுவீச்சு காரணமாக ரபா என்ற பாதையை எகிப்து மூடியுள்ளது. காஸாவில் இருந்து மக்கள் வெளியேறக் கூடிய பாதையாக இதுவே இருப்பதால், அங்குள்ள மக்களால் வெளியேற முடியாதுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த நாட்களில் இரு தரப்பினராலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் உள்ளிட்ட 2000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.