January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உக்கிரம்: காஸா மீது குண்டு மழை! (Update)

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், இதுவரையில் இரு தரப்பிலும் 1200 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களை குறிவைத்து இரு தரப்பிலும் வான் மற்றும் செல் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் நடத்தி வருகிறது. இஸ்ரேல் விமானப்படைகள் காஸா மீது குண்டுமழை பொழிகின்றன.

இந்நிலையில், காஸாவில் இருந்து சுமார் 123,538 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.

வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டவர்களில் பலர் கடலோரப் பகுதியில் உள்ள சுமார் 64 பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதல்களில் பல அடுக்கு மாடி குடியிருப்புகளும் அடங்குவதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மொத்தம் 159 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் 1,210 கட்டடங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

காஸா மீது மூன்றாவது நாளாக குண்டுமழை பொழியும் இஸ்ரேல், அங்கே ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் மீது மீது ஹமாஸ் குழு நடத்தியிருக்கும் தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு ஒரு விமானம் தாங்கி கப்பல், கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பவிருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. மேலும், இஸ்ரேலுக்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கப்போவதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது.

தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை ‘இதுவரை நடந்திராத பயங்கரமான தாக்குதல்’ என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஹமாஸ் குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பலரை கொன்றுள்ளதுடன், பலரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்களில் அமெரிக்கக் குடிமக்களும் அடங்குவர் என்று வெளியாகியிருக்கும் அறிக்கைகளைச் அமெரிக்கா சரிபார்த்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்திருக்கிறார்.