July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகின் முதலாவது ஒமிக்ரோன் காரணமான உயிரிழப்பு பிரிட்டனில் பதிவு!

கொவிட் வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவரின் முதலாவது மரணம் பிரிட்டனில் பதிவாகியுள்ளது.

இதனை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் உயிரிழந்தவர் பற்றிய விவரங்கள் மற்றும் நோயாளிக்கு தடுப்பூசி போடப்பட்டதா என்பது தொடர்பில் பிரிட்டன் அரசு தகவல் தெரிவிக்கவில்லை.

பிரிட்டனில் முதலாவது ஒமிக்ரோன் தொற்று நவம்பர் 27 ஆம் திகதி கண்டறியப்பட்டதிலிருந்து நாடு கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதித்தது.

அத்தோடு இந்த புதிய மாறுபாடானது தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்டவர்களினது நோய் எதிர்ப்பு சக்தியையும் தோற்கடிக்க கூடியது என பிரதமர் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தார்.

ஒமிக்ரோன் தொடர்பான இறப்பு பிரிட்டனுக்கு வெளியே நிகழ்ந்திருக்கலாம். எனினும் அது குறித்து பகிரங்க அறிவிப்பு இல்லாததன் காரணமாக இது முதலாவது இறப்பாக பதிவாகியுள்ளது.

 

ஒமிக்ரோன் மாறுபாடு இப்போது பிரிட்டன் தலைநகரில் சுமார் 40% நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில்18 முதல் 85 வயதுக்கு இடைப்பட்ட 10 பேர் ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் கூறியுள்ளது.

இதேவேளை,  பிரட்டனில் இன்று (13) 1,576 பேருக்கு இன்று ஒமிக்ரோன் தொற்று உறுதியானது. இதையடுத்து ஒமிக்ரோன்  தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,713 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே, தமது நாட்டின் கொவிட் உயிரிழப்புகளில் ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக ஏற்பட்டவை உள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்படவில்லை என தென்னாபிரிக்காவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.