
இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் கடந்த நிலையில், ஐநா சபையின் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரையில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் விஜயத்திற்கு முன்னர், அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அவருக்கு அனுப்பிவைத்த கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிட்டிருந்தது.
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் வேண்டுகோள் விடுத்தது.
1. திருகோணமலையில் ஐந்து மாணவர்களின்படுகொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றச்சாட்டு உள்ளவர்களை நீதியின் முன்நிறுத்தவேண்டும்.
2. இராணுவ அதிகாரி சார்ஜன்ட் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இரத்துசெய்யவேண்டும்.
3. ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியன்ஸ் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
4. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.
5. நாட்டின் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான பாராபட்சம் மற்றும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதுடன், முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும்.
6. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கி, இழப்பீடுகளையும் வழங்க வேண்டும்.
ஆகிய விடயங்களை இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவருமாறும் மைக் பொம்பியோவுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கோரியிருந்தது.