May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொம்பியோ விஜயம்: இலங்கைக் களத்தில் அமெரிக்கா- சீனா பனிப்போர்!

-குகா

உலக அரங்கில் பெரும் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்தும் தீவிரமடைந்துவருகின்றது.  கடந்த வாரத்தில் இலங்கை என்ற களத்தில் அந்த வல்லரசு நாடுகள் நேரடியாக மோதிக்கொண்டதை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருந்தது.

அமெரிக்காவில் அடுத்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அந்நாட்டின் இராஜாங்கச் செயலாளர் பொம்பியோ இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இலங்கைக்கு பொம்பியோ வருகை தருவதற்கு முன்னரே ஏட்டிக்குப் போட்டி கருத்து மோதல்கள் வெளிப்படத் தொடங்கிவிட்டன. சீன-இலங்கை உறவு தொடர்பில் அமெரிக்கா கருத்து வெளியிட,  சீனத் தூதரகம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வெளியிட்டது.

“இலங்கைக்கு தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வர வேண்டாம்” என்று அந்த அறிக்கையில் சீனா குறிப்பிட்டிருந்தது.

இலங்கைக்கு வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் பொம்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில் “சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியால் பெரும் அச்சுறுத்தல்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கோட்டபாய -பொம்பியோ சந்திப்பு 

இலங்கை வந்தடைந்த பொம்பியோ முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை தனியே சந்தித்து கலந்துரையாடினார். இருவரும் கலந்துரையாடிய விடயங்கள் முழுமையாக வெளியில் வராத போதும் கலந்துரையாடலின் மையப்பொருள் சீனா சம்பந்தபட்டதாகவே இருந்திருக்கின்றது என்பதை பின்னர் நடந்த ஊடக சந்திப்பில் உணரமுடிந்தது.

சர்வதேச தொடர்புகளின் போது நாட்டின் சுயாதீனத் தன்மை, ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை விட்டுக்கொடுக்க இலங்கை ஒருபோதும் தயாரில்லை என்று பொம்பியோவிடம் உறுதிபடத் தெரிவித்து விட்டதாக ஜனாதிபதி கோட்டாபய தரப்பு கூறுகின்றது.

“இரு நாட்டு உறவு தொடர்பாக இருவரும் கலந்துரையாடினார்கள். எந்தவித ஒப்பந்தங்கள் குறித்தும் பேசவில்லை” என இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சு நடத்திய பின்னர் பொம்பியோ ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அதன்போது, சீனாவை கடுமையாக விமர்சிக்கும் வகையிலான கருத்துக்களை பொம்பியோ முன்வைத்திருந்தார்.

“ஜனநாயக விழுமியங்கள் மற்றும் இறையாண்மை உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கு அமெரிக்கா வேறுபட்ட பார்வையை வழங்குகிறது. சீனா அதற்கு மாறாக வித்தியாசமான பார்வையை வழங்குகிறது. சீனா ஆக்கிரமிப்பு நோக்குடன் செயற்படுகிறது. இலங்கையை சீனா வேட்டையாடி வருகிறது. அந்த நாடு நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை மீறி வருகின்றது” என்று பொம்பியோ அந்த மாநாட்டில் வைத்து சீனாவை கடுமையாக சாடியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், “இலங்கையுடனான இராஜதந்திர அணுகு முறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரட்டை வேடங்களை போடுகிறது” என்று தெரிவித்தது.

தென்னாசியாவில் தாம் விஜயம் மேற்கொண்ட நாடுகளில் எல்லாம் சுமூகமான பேச்சுக்களை நடத்தி பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பொம்பியோ, சீனாவுடனான மோதலுக்கு இலங்கையைக் களமாக்கிக் கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் பதிவிட்டுள்ளனர்.

இந்திய விஜயத்தின் போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்திய பொம்பியோ, தகவல் பரிமாற்றம், இராணுவ உபகரண கொள்வனவு உள்ளிட்ட விடயங்கள் உட்படஐந்து ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.

ஆனால் இலங்கையுடன் எந்தவித ஒப்பந்தங்கள் குறித்தும் பேசாமல், சீனாவை இலக்கு வைத்து காய் நகர்த்தி விட்டுச் சென்றுள்ளார் பொம்பியோ. இந்த விஜயத்தின்போது முக்கிய சில செய்திகளையும் இலங்கைக்கு அவர் சொல்லிச் சென்றுள்ளார்.

 

“பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்ய வேண்டும், இவை மிக அவசியமானவை. இந்தக் கடமைகளில் இருந்து இலங்கை ஒருபோதும் விலக முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா

இலங்கையின் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் பயணத்தடை, ஆதாரமற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்று ஊடகவியலாளர் ஒருவர் பொம்பியோவிடம் கூறினார்.

“அது அமெரிக்க சட்ட நடைமுறைகளின் படி நடந்துள்ளது. தொடர்ந்தும் அந்த முடிவுகள் மீளாய்வு செய்யப்படும். சட்ட ரீதியாகவும் தரவுகள் ரீதியாகவும் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்போம்” என்று பொம்பியோ பதிலளித்தார்.

பொம்பியோ சொல்லிச் சென்றுள்ள செய்திகளை இலங்கை எவ்வாறு புரிந்து செயற்பட போகின்றது, சீனா – அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான உறவுகளை இலங்கை எவ்வாறு கையாளப்போகின்றது போன்ற கேள்விகளுக்கான பதில் வரும் காலங்களில் கிடைக்கலாம்.