
ஜப்பானில் செவ்வாயன்று (30) கொவிட் வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதை அடுத்து கொவிட் வைரஸின் புதிய மாறுபாடு பரவுவதை தடுக்க உள்வரும் பயணிகளுக்கு நாடு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
டிசெம்பர் 01 முதல் அமுலுக்கு வரும் இந்த புதிய கட்டுப்பாடுகள் அடுத்த ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நமீபியாவில் இருந்து டோக்கியோவுக்கு பயணம் செய்த 30 வயது நபரிடம் நமீபிய தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஷிகேயுகி கோட்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நமீபியா புதிய மாறுபாடான ஒமிக்ரோன் பதிவாகிய ஒன்பது ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும்.
இவருடன் விமானத்தில் பயணித்த 71 பயணிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வசதிகளின் கீழ் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கொவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொற்று உறுதியான நபர் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளதாக ஷிகேயுகி கோட்டோ தெரிவித்துள்ளார்.
அவர் அறிகுறி இல்லாத போதும் அவரின் உடல் வெப்பநிலை அதிகரித்திருந்ததாக கோட்டோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை முதல் ஒரு மாதத்திற்கு உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பயணிகளைத் தடை செய்வதன் மூலம் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜப்பான் மிகவும் கடுமையான அணுகுமுறையை முன்னெடுத்துள்ளது.
எனினும் நாட்டுக்கு திரும்பும் ஜப்பானிய பிரஜைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வசதிகளில் மூன்று முதல் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் மாறுபாடு பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக நாடுகள் பலவும் தென்னாபிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை கடந்த வார இறுதியிலிருந்து அமுல்படுத்தியுள்ளன.
வைரஸ் தொற்றின் முதலாவது நபர் கடந்த 25 ஆம் திகதி கண்டறியப்பட்டது முதல் ஒரு வாரத்திற்குள், இந்த மாறுபாடு ஐரோப்பா முழுவதும் பரவி ஆஸ்திரேலியா மற்றும் கொங்கொங் வரை சென்றடைந்துள்ளது.
இதுவரை ஒமிக்ரோன் மாறுபாடு ஜப்பானுக்கு வெளியே 17 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பதிவாகியுள்ளது.