January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டன் பிரதமரின் டுவிட்டர் பதிவால் பிரான்ஸ் ஜனாதிபதி கடும் அதிருப்தியில்

பிரிட்டனுக்கு குடியேற முயலும் புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் திருப்பி அழைக்க வேண்டும் என்ற போரிஸ் ஜோன்சனின் பகிரங்க அழைப்பை அடுத்து இம்மானுவேல் மக்ரோன் கோபமாக பதிலளித்துள்ளார்.

சேனலைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான நெருக்கடியில் பிரிட்டிஷ் பிரதமரின் அணுகுமுறையால் “ஆச்சரியம்” அடைந்ததாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

வெள்ளிக்கிழமை, ரோம் விஜயத்தில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.

தலைவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதன்கிழமை சேனலின் ஊடாக பிரிட்டனுக்கு புலம்பெயர முயன்ற 27  பேர் உயிரிழந்ததையடுத்து புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் திரும்பப் பெற வேண்டும் என்று போரிஸ் ஜோன்சன் ட்விட்டரில் மக்ரோனுக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து கோபமடைந்த பிரான்ஸ் அரசு பிரிட்டனின் உள்துறை செயலர் பிரித்தி படேலுக்கான உச்சிமாநாட்டு அழைப்பை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து இராஜதந்திர ரீதியில் மோதல் வெடித்தது.

எனினும் பிரிட்டன் அரசாங்கம் அதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளது.  “இது நாம் ஒன்றாக சரிசெய்ய வேண்டிய பிரச்சனை” என போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிரெக்சிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,சேனல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரான்ஸ் மீனவர்கள் ஒருநாள் நடவடிக்கையை ஏற்பாடு செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.