November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழகத்திலிருந்து கிடைத்த தவறான மின்னஞ்சலினால் தற்கொலை செய்து கொண்ட மாணவி!

(Photo:wikipedia)

பரீட்சையில் தோல்வியடைந்துவிட்டதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தவறான மின்னஞ்சல் காரணமாக, ஆற்றில் குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரித்தானியாவின் வடக்கு வேல்ஸில் உள்ள ஆங்கிலேசி பகுதியைச் சேர்ந்த மாரெட் ஃபோல்க்ஸ், என்ற 21 வயது இளம் பெண், ஜூலை 8 ஆம் திகதி இவ்வாறு, மெனாய் பாலத்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற ஒரு மின்னஞ்சலில் அவர் 39 வீத மதிப்பெண்களுடன் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர் 65 வீதம் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

உண்மையில் அவர், மார்ச் 26 ஆம் திகதி எழுதிய பரீட்சையில் 39 விகித மதிப்பெண்களை பெற்றுள்ளார்.4 ஏப்ரல் 24 அன்று இடம்பெற்ற மறுதேர்வில் சித்தியடைந்துள்ளார்.

எனினும் பல்கலைக்கழகத்தினால் அனுப்பப்பட்ட தவறான மின்னஞ்சல் திருத்தப்படுவதற்கு முன்பே மாரெட் ஃபோல்க்ஸ், உயிரிழந்தமை அவரின் அன்புக்குரியவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாரெட் ஃபோல்க்ஸ், “பரீட்சையில் தோல்வியடைந்துவிட்டதாகவும், அவர் பட்டப் படிப்பின் மூன்றாம் ஆண்டுக்கு முன்னேற முடியவில்லை என்றும் தவறாக கூறப்பட்டதாலும்” தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கார்டிஃப் பல்கலைக்கழக மாணவியான மாரெட் ஃபோல்க்ஸ், “பார்மசியூட்டிகல்ஸ்” பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். பல ஆண்டுகளாக பார்மசியில் பகுதி நேரமாக வேலை செய்து வந்துள்ளார்.