January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பாகிஸ்தான் அணுசக்தியின் தந்தை’ டாக்டர் அப்துல் காதர் கான் காலமானார்

(Photo: twitter /naeem malik)

‘பாகிஸ்தான் அணுசக்தியின் தந்தை’ என அறியப்படும் அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல் காதர் கான், தனது 85 ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் -19 தொற்றுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதே அவர் உயிரிழந்துள்ளார்.

டாக்டர் கான், பாகிஸ்தானை அணுசக்தி ஆயுதங்களை உருவாக்கிய உலகின் முதலாவது இஸ்லாமிய அரசாக மாற்றியதன் காரணமாக ஒரு தேசிய வீரராக பாராட்டப்பட்டார்.

எனினும் அவர் வட கொரியா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு அணுசக்தி ரகசியங்களை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

பல்வேறு காரணங்களால் இவர் கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

 

இவரின் மறைவு குறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி டுவிட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், “டாக்டர் அப்துல் காதிர் கான் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்ததாகவும் தேசத்துக்கான அணு ஆயுதத் திட்டத்தை உருவாக்க உதவிய அவரின் சேவையை இந்த தேசம் மறக்காது” எனவும் கூறியுள்ளார்.

 

பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘பாகிஸ்தான் மக்களுக்கு அப்துல் காதிர் கான் மிகப்பெரிய அடையாளம் எனவும் அண்டை நாட்டினரிடம் இருந்து நாட்டை பாதுகாக்க கானின் சேவை உதவியதாகவும்’ தெரிவித்துள்ளார்.

அப்துல் காதர் கான், 1936 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் திகதி இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.