
File Photo
அமெரிக்கும் அதிகாரிகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே கத்தாரில் நேருக்குநேர் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்க அரச அதிகாரிகள் மற்றும் தாலிபன்கள் இடையே நேருக்கு நேர் நடக்கும் முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.
இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்தல், ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுதல், ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறியதை அடுத்து அங்கு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு பெண்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும், வேலைக்கு வரவும் தடை விதித்துள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேறி விட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும். இன்னும் சில அமெரிக்கர்களும், அமெரிக்க இராணுவத்திற்கு உதவியவர்களும் ஆப்கானிஸ்தானிலேயே இருப்பதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியிலேயே இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தாலிபன்களுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பதற்காக தாலிபான்களை தாம் அங்கீகரிப்பதாக பொருளாகாது என்று அமெரிக்கா கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலேயே இந்த பேச்சுவார்த்தை அமைந்துள்ளதாகவும், இதற்காக இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு, கத்தாரில் அந்தப் பேச்சுவார்தை நடத்தப்படுவதாகவும் அமெரிக்கவினால் கூறப்பட்டுள்ளது.