July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனா – தாய்வான் பதற்றம் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை!

சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையே  தீவிரமடைந்து வரும் அமைதியின்மை  குறித்து, தாம் மிகவும் கவலையடைவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

தமது வான் பாதுகாப்பு பரப்புக்குள் சீனாவின் போர் விமானங்கள் நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக ஊடுருவியுள்ளதாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சர் சூகூ செங், இரு தினங்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலைமைகள் தொடர்பில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் சீனாவின் உயர் இராஜதந்திரி யாங் ஜீச்சி ஆகியோர் ஒக்டோபர் 6 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், ”சீனாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் நாள் உருவாகாமல் இருக்க அமெரிக்கா இப்போது பணியாற்றி வருகின்றது” என ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 40 வருடங்களில் சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையே நிலவிவரும் அமைதியின்மை, தற்போது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

2025 ஆம் ஆண்டளவில் தாய்வானை முழுமையாக ஆக்கிரமிக்கும் வல்லமையை சீனா பெற்றுக்கொள்ளும் என தாய்வானின் பாதுகாப்பு அமைச்சர், அச்சம் வெளியிட்டுள்ளார்.

தாய்வான் போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களை நிர்மானிப்பதற்கு பல பில்லியன் டொலர்களை செலவிடுவதற்கான சட்டமூலம் தொடர்பாக கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

தாய்வான் தன்னை இறையாண்மையுடைய அரசாக கருதுகின்ற போதிலும், சீனா அதனை தன்னிலிருந்து பிரிந்துபோன மாநிலமாகவே கருதுகின்றது.