July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி ஏற்றிக்கொள்ள நண்பர்களை தூண்டுபவர்களுக்கு பரிசு வழங்கும் சுவிட்சர்லாந்து!

நாட்டு மக்களிடையே தடுப்பூசி ஏற்றிக்கொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்க சுவிட்சர்லாந்து அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, கொவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி ஏற்றிக்கொள்ள பிரஜைகளை தூண்டுபவர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு பரிசுகளை வழங்குகி வருகிறது.

நாட்டில் தடுப்பூசி விகிதத்தை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

புதிதாக தடுப்பூசி போடுக்கொள்ளும் ஒவ்வொரு நபரிடமும் தங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள தூண்டிய நபரின் பெயர் கேட்கப்பட்டு, அந்த நபருக்கு அரசு 50 சுவிஸ் பிராங்க் பரிசை வழங்குகின்றது.

”தடுப்பூசியின் நன்மைகள் குறித்து நண்பர், அயல் வீட்டார், சக ஊழியர் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிப்பதன் ஊடாக அனைவரும் உதவலாம், மக்களின் இந்த ஒத்துழைப்பு வெகுமதி அளிக்கப்பட வேண்டியது ” என்று சுவிட்சர்லாந்து அரசு கூறியுள்ளது.

தடுப்பூசி பிரச்சாரத்திற்காக 150 மில்லியன் பிராங்குகளை சுவிட்சர்லாந்து அரசு செலவிட்டுள்ள அதேவேளை 170 நடமாடும் தடுப்பூசி மையங்களையும், தேசிய தடுப்பூசி வாரத்தில் அரசு முன்னெடுத்துள்ளது.

மேற்கு ஐரோப்பாவில் குறைந்த தடுப்பூசி விகிதங்களை கொண்ட நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில், நாட்டின் 8.7 மில்லியன் மக்கள்தொகையில் 58 வீதமான மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அங்கு கொரோனா வைரஸின் புதிய தொற்று எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும், தீவிர சிகிச்சை பிரிவின் நிலைமை தொடர்ந்தும் பதட்டமாக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, பருவகால மாற்றங்களின் போது மற்றொரு கொவிட் தொற்று அலை ஏற்படும் அபாயம் இன்னும் உள்ளதாகவும் இது மருத்துவமனைகளில் அதிக சுமையை ஏற்படுத்தும் எனவு அரசு தெரிவிக்கின்றது.

சுவிட்சர்லாந்தில் இதுவரை 10,713 கொவிட்  இறப்புகளும்,  840,000 க்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்களும் பதிவாகியுள்ளன.