July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தாலிபான்களுடன் ட்ரம்பின் ஒப்பந்தமே ஆப்கான் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தியது’: அமெரிக்க கட்டளைத் தளபதி

தாலிபான்களுடன் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட ஒப்பந்தமே ஆப்கான் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தியதாக அமெரிக்க தலைமைக் கட்டளைத் தளபதி, ஜெனரல் பிரேங்க் மெக்கென்ஸி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உள்ளக இராணுவ சேவைகள் ஆணைக்குழு கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் வீழ்ச்சியில் 2020 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறுவதாக தாலிபான்களுக்கு வாக்குறுதி அளித்தமை தாக்கம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க சீரேஷ்ட இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாலிபான்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆபத்தான டோஹா உடன்படிக்கை ஆப்கான் அரசாங்கத்தையும் இராணுவத்தினரையும் உளவியல் ரீதியாகப் பாதித்ததாக ஜெனரல் பிரேங்க் மெக்கென்ஸி சுட்டிக்காட்டியுள்ளார்.

தாலிபான்களுக்கும் ஆப்கான் அரசாங்கத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட இருந்த இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகள் டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் வெற்றியளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி படைகளின் வெளியேற்றத்தை மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை நீடித்தாலும், திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்தியதாக அமெரிக்க சீரேஷ்ட இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.