January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தடுப்பூசி பற்றிய “தவறான பிரசார வீடியோக்களை” நீக்க யூடியூப் நடவடிக்கை!

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பற்றிய “தவறான பிரசாரங்கள்” அடங்கிய அனைத்து வீடியோக்களையும் நீக்க யூடியூப் நிறுவனம்  நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தோடு, யூடியூபில் போலிப் பிரசாரங்களை வெளியிடுவதற்கான  தடையை மேலும் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, போலி தகவல்கள் அடங்கிய வீடியோக்களை பதிவேற்றும் யூடியூபர்களின் கணக்குகளை முடக்குவது தொடர்பில் கவனம்  செலுத்தியுள்ளதாக நிறுவனம் புதன்கிழமை (29) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கொவிட் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக கடந்த காலத்தில் பல வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டன.

இந்த காணொளிகள் தடுப்பூசி போடுவதில் பொது மக்களின் ஆர்வத்தை குறைப்பதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக  ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள், கொவிட் தொற்றுநோய் தொடர்பான தவறான மற்றும் போலிப் பிரசாரங்களை பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரச தலைவர்கள் உட்பட பலர் விமர்சித்தனர்.

இந்த பின்னணியில், தடுப்பூசி பற்றிய தவறான தகவல்கள் அடங்கிய 130,000 வீடியோக்கள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூடியூப் நிறுவனம் உலகளாவிய ரீதியில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயணர்களை தமது சமூக வலைத்தளத்தில் கொண்டுள்ளது.