May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘என்ஜாய் என்சாமி’ பாடலின் பின்னால் மறைந்திருக்கும் ஒரு சமூகத்தின் அவலம்

‘சுருக்கு பையம்மா

வெத்தலை மட்டையம்மா

சொமந்த கையம்மா

மத்தாளம் கொட்டுயம்மா

தாயம்மா தாயம்மா

என்ன பண்ண மாயம்மா

வள்ளியம்மா பேராண்டி..’

இந்த எஞ்சாய் என்சாமி பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் தெருக்குரல் அறிவு.

இது வள்ளியம்மா சொன்ன கதையல்ல, இது வள்ளியம்மாளின் கதைதான் என ஓடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார் தெருக்குரல் அறிவு.பூர்வக்குடி மக்களும், வள்ளியம்மாவும் தான் இந்த பாடலின் மையப்புள்ளி என்று தெரிவித்துள்ளார் தெருக்குரல் அறிவு.

ஏன் சாமி சாப்பிட்டியா, ஏன் சாமி நல்லா இருக்கியா ,ஏன் சாமி சோகமா இருக்க அப்படின்னு சொல்லி தான் என் பாட்டி என்னை கூப்பிடுவாங்க ….என  தெருக்குரல் அறிவு இசை வெளியீட்டு விழாவின் போது  கூறியிருந்தார் . அங்கிருந்து பிறந்ததுதான் இந்த என்ஜாய் என்சாமி பாடல் என அவர் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

என்சாமி அப்படின்னு சொல்லி தான் எங்க பாட்டி வள்ளியம்மாள் என்னை கூப்பிடுவாங்க. அவங்களோட அந்த பாசத்தையும் அவர்களுடைய அந்த மண் வாசனையையும் பிரதிபலிக்கும் பாடல்தான் இந்த என்ஜாய் என்சாமி பாடல்.தற்போது உலகம் பூராகவும் உள்ள மக்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது .

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக மண்ணில் வாழ்ந்த, இந்த மண்ணுக்காக உழைத்துக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தை ,நிலமற்று வாழ்ந்த மக்களை பஞ்சம் நீடித்த காலத்தில் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைசெய்ய அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டதாக தெருக்குரல் அறிவு  கூறியுள்ளார்.

அவ்வாறு அங்கு மனித கால் தடங்களே படாத அடர் காட்டுப்பகுதிகளை அழித்து, நகரப் பகுதிகளை உருவாக்குகிறார்கள் இங்கிருந்து சென்றவர்கள்.

வீடுகளை அமைத்து குடிகளையும் அங்கே அவர்கள் உருவாக்குகிறார்கள். இவ்வாறு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றியது ,தேயிலைத் தோட்டமும் ,தேயிலை பறிக்கும் தொழிலாளர்களும் என தெருக்குரல் அறிவு இசை வெளியீட்டு விழாவின் போது குறிப்பிட்டார்.

குறிப்பாக இந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எல்லோருமே தமிழகத்தில் பல்வேறு சேரி பகுதிகளில் இருந்து சென்ற உழைக்கும் மக்கள் தான்.

மீண்டும் இலங்கையிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பும் நிலை ஏற்படுகிறது. சனத்தொகை கூடிய காரணத்தினால் மீண்டும் எங்கிருந்து வந்தீர்களோ அங்கே செல்லுங்கள் என   தமிழகத்திற்கு அனுப்பி விடப்படுகிறார்கள் தேயிலை பறிக்கும் மக்கள் .

குறிப்பாக அங்கிருந்து வந்தவர்களுக்கு தெரிந்தது ஒரே ஒரு வேலை மட்டுமே, தேயிலை பறிக்கும் தொழில் மட்டும்தான்.

மூன்று- நான்கு தலைமுறைகளாக அங்கு தேயிலை பறிக்கும் தொழில் செய்த இவர்களுக்கு வேறு வேலை எதுவும் தெரியவில்லை. ஆகவே மீண்டும் தமிழகம் வந்த இவர்கள் வேலை தெரியாமல் திண்டாடிய நேரத்தில் மீண்டும் மலைப் பகுதிகளை நோக்கி செல்கின்றனர்.

ஊட்டி ,கூடலூர் ,வால்பாறை, நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கிருக்கும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்திருக்கிறார்கள்.அங்கும் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் அதிகமானபடியால் , அந்த ஆதிக்குடிகள்  கூலித் தொழிலுக்காக பெயிண்ட் அடிக்கும் வேலை என ஏனைய  வேலைகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர் .

அவ்வாறு கஷ்டப்பட்ட மக்களுடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைதான் இந்த பாடல்.அவ்வாறு வந்து தமது குடும்பங்களை காப்பாற்ற போராடிய ஆயிரக்கணக்கான வள்ளியம்மாள்களை போற்றும் பாடல் தான் இந்த என்ஜாய் என்சாமி என தெருக்குரல் அறிவு தெரிவித்திருக்கிறார்.

முக்கியமாக இந்த பாடலின் காட்சிகளில் தனது சொந்த ஊரையும் அங்குள்ள மூத்த குடிமக்களையும் அவர் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். குறிப்பாக அவருடைய தாத்தா பாட்டி வள்ளியம்மாள் ஆகியோரையும் இந்த காட்சிகளில் அவர் பயன்படுத்தி இருப்பது மிகவும் சிறப்பு.

நான் கேட்டு வளர்ந்த ஒப்பாரிப் பாடல்களும், நாட்டுப்புறப் பாடல்களும்தான் எனது ஆல்பத்துக்கு அடிப்படை எனக் கூறியுள்ள தெருக்குரல் அறிவு, என்னைக் கேட்டால் நான் அறிந்த மிகச் சிறந்த ராப் பாடகர் எனது பாட்டிதான்  என தெரிவித்திருக்கிறார். அவர் ஒப்பாரியாகப் பாடிய பாடல்களின், அவர் கூறிய கதைகளின் தாக்கம்தான் இந்த ஆல்பத்தின் அடிப்படை எனவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும் நாம் நம்முடைய வேர்களை நினைவு கூருவது கிடையாது, ஆகையால் இந்த மண் வாசனையும், இந்த பாடலில் வந்துள்ள அனைத்துமே அந்த ஆதிக்குடிகள் உடைய மூத்த வீரர்களை நினைவு கூருவதாக இது அமைவதாக அவர் கூறியிருக்கிறார்.

ராப் என்பது ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களிடம் இருந்து வந்தது.அதாவது தன்னை போல குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மக்களிடமிருந்து உருவாக்கியதே இந்த இசை என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவுக்கான ஹிப் ஹாப் பாடலே ஒப்பாரி தான் என கூறியிருக்கும் அவர், அந்த வகையில்தான் இந்த என்ஜாய் என்சாமி பாடலிலும் ஒப்பாரி வரிகள் இடம் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.நாட்டுப்புற பாடல்கள், கானா பாடல்கள் ,ஒப்பாரி  போன்றவைதான் இந்திய மண்ணின் அடையாளங்கள்.

ஆதி குடிகளின் ஒப்பாரி பாடல் தான் தற்போது எல்லோரது காதுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
பட்டி தொட்டியெல்லாம் என்ஜாய் என்சாமி என தற்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது  இந்த பாடல்.

யூடியூப்பில் இந்தப் பாடல் சுமார் 44 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். தீ, தெருக்குரல் அறிவு இவர்களின் குரலில் என்ஜாய் என்சாமி பாடல் காட்சி அமைப்பு மிகவும் பிரமாதமாக மூத்த குடிகளின் வாழ்வியலையும் அதனோடு தற்போது கலந்த  நடைமுறை வாழ்க்கையையும் மிகவும் துல்லியமாக படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள் பாடல் குழுவினர்.

இந்த பாடல் மூலம் தெருக்குரல் அறிவு, தீ, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் மக்களிடம் சொல்ல வந்த விடயம் தெளிவாக சென்றடைந்து விட்டது என்றே நம்பலாம் .

மண்ணக்கொடுத்த பூர்வக்குடியும், வள்ளியம்மாவும் தெரியலையாங்கிற கேள்வி வருகிறது.ரீப்பிட் செய்து இந்தப் பாடலை கேட்கும்போது  பாடல் வரிகள் நமக்கு எதையோ நினைவூட்டும் விதமாகத் தான்  இருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது.

நல்லபடி வாழச் சொல்லி

இந்த மண்ணை கொடுத்தானே

பூர்வக்குடி

கம்மாங்கரை காணியெல்லாம்

பாடித் திரிஞ்சானே

ஆதிக்குடி

நாயி நரி

பூனைக்குத்தான்

இந்த ஏரிக்குளம் கூட சொந்தமடி

என வரும் இந்த வரிகள் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்வியலை தொட்டுச் செல்கிறது.

இந்த மண்ணின் ஆதிக்குடிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது இந்த வரிகள்.

இந்த உலகமே பூர்வக்குடிக்கு சொந்தமாக இருந்தது.நிலத்தை பற்றிய கவலையெல்லாம் அவனுக்கும் கிடையாது என கூறும் இந்தப் பாடல் ,நாம்  நமது மூத்த குடிகளையும் அவர்கள் வழிவழியாக வந்த வேர்களையும்,அவர்களின் வாழ்வியலையும் மறந்துவிடக்கூடாது என்பதையும் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்க்கை எவ்வளவு உண்மையானது, தத்ரூபமான என்பதை சொல்லிக் காட்டும் இந்த பாடல், தற்போதைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை .

This slideshow requires JavaScript.