
எரிமலை சீற்றத்தால் ஸ்பெயின் நாட்டின் தீவான லா பால்மாவில் உள்ள விமான நிலையத்தை மூட அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
லா பால்மாவில் உள்ள ‘கும்ப்ரே வீஜா’ எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை குமுறத் தொடங்கியது.
புதிய துவாரத்திலிருந்து எரிமலைக் குழம்பு வெளியேற தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக எழுந்த அடர்த்தியான புகை மண்டலம் மற்றும் சாம்பல் மக்களின் இயல்பு வாழ்க்கையையும், விமான போக்குவதைத்தையும் முற்றாக பாதித்துள்ளது.
அடர்தியான புகை இப்போது நான்கு கிலோமீட்டர் வரை காற்றில் கலந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 350 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளன.
ஆனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
எரிமலை சீற்றம் காரணமாக லா பால்மாவில் கேனரியில் உள்ள ஏனைய தீவுகளுக்கான விமான போக்குவரத்துக்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
விமான ஓடுபாதையில் உள்ள சாம்பலை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எரிமலை குமுறல் தீவிரமடைந்ததால் தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.