பிரிட்டன் இராணுவத்திற்காக பணியாற்றிய, 250 ஆப்கான் மொழி பெயர்ப்பாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியான சம்பவம் தொடர்பில் பிரிட்டன் அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
குறித்த தரவு மீறல் சம்பவம் தொடர்பில் விசாரணையை தொடங்கியுள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு இடம் பெயர எதிர்பார்த்திருக்கும் 250 க்கும் மேற்பட்டவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் அனைத்து பெறுநர்களாலும் பார்க்கக்கூடிய வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட மின்னஞ்சலின் காரணமாக இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதன் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் பெயர்கள், சில சுயவிவரங்கள் மற்று அவர்களின் படங்கள் பெறுநர்களினால் அணுக முடிந்துள்ளது.
இந்த மின்னஞ்சல் இங்கிலாந்தின் ஆப்கானிஸ்தான் இடமாற்றங்கள் மற்றும் உதவி கொள்கைக்கு (Arap) பொறுப்பான குழுவால் ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்கும் அல்லது பிற நாடுகளுக்கு செல்ல முடிந்த மொழி பெயர்ப்பாளர்களுக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பிரிட்டன் இராணுவத்திற்காக பணியாற்றிய, 250 ஆப்கான் மொழி பெயர்ப்பாளர்கள் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மொழி பெயர்ப்பாளர்களிடம் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை மாற்றும்படியும் குறித்த குழு கோரியது.
அத்தோடு,அவர்களை இடமாற்றம் செய்ய தம்மால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.