ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடந்து, வெளிநாடுகளில் இருக்கும் ஆப்கான் தூதரகங்களின் அதிகாரிகள், நாடு திரும்ப முடியாது நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள ஆப்கான் தூதுவர்கள் மற்றும் தூரக அதிகாரிகள் தமது கடமைகளை தொடர முடியுமென்று தலிபான்கள் அறிவித்துள்ள போதும், தூதரக அலுவல் மற்றும் தங்களது சொந்த பணிகளுக்கு பணம் இல்லாததால் அதிகாரிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது குடும்பத்தினரை மீட்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான நிலைமையில் தூதரக அதிகாரிகள் அகதிகளாக தங்களை அங்கீகரிக்கக் கோரும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தமது குடும்பத்தினரை ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வருவதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தூதரக அதிகாரிகளின் இந்த முயற்சியை தலிபான்கள் அறிந்தால் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் தங்களது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அவர்கள் அஞ்சுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.