டைம்ஸ் சஞ்சிகையின் 2021 ஆம் ஆண்டுக்கான செல்வாக்குமிக்க 100 பேரின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்பவர்கள் இடம்பிடித்துள்ளதோடு, தாலிபான்களின் இணை ஸ்தாபக தலைவர் முல்லா பராதரும் இடம்பெற்றுள்ளார்.
100 செல்வாக்குமிக்க தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், பிரிட்டன் இளவரசன் ஹெர்ரி மற்றும் மேகன், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவின் சேரம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அதார் பூனவல்லா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடி இந்தியாவை மதச் சார்பின்மையில் இருந்து இந்து தேசியவாதம் நோக்கி எடுத்துச் செல்வதாக டைம்ஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றிகொள்ள முடியாது எனக் கருதப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு, மாநில முதலமைச்சுப் பதவியைத் தக்கவைத்துக்கொண்ட காரணத்தினால், மம்தா பானர்ஜி 100 ஆளுமைகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, தாலிபான்களின் இணை ஸ்தாபக தலைவர் முல்லா பராதரும் டைம்ஸ் சஞ்சிகையின் 100 தலைவர்களுள் இடம்பெற்றுள்ளார்.
தாலிபான் தலைவர் முல்லா பராதர் ‘கவர்ந்திழுக்கும் இராணுவத் தலைவர்’ மற்றும் ஆழ்ந்த பக்திமிக்க தோற்றம் உடையவர்’ என்று டைம்ஸ் சஞ்சிகையில் வர்ணிக்கப்பட்டுள்ளார்.