July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து முன்னேறும் தலிபான்கள்; குண்டூஸ் நகரை கைப்பற்றினர்!

ஆப்கானிஸ்தான்-தலிபான் மோதலில் தலிபான்கள் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது முதல் ஆப்கானிஸ்தான் இராணுவ படைகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதுவரை பல முக்கிய நகரங்களையும் கிராமங்களையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஜவ்சான் மாகாண தலைநகரம் ஷெபர்கானை தலிபான்கள் கைப்பற்றின.

தற்போது மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான குண்டூஸ் நகரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று நாட்களில் தலிபான்கள் கைப்பற்றிய மூன்றாவது மாகாண தலைநகரம் இதுவாகும்.

போராளிகள் மற்றொரு வடக்கு நகரமான சர்-இ-புலுக்குள் நுழைந்தனர்.இது குண்டூஸிலிருந்து சில மணி நேரங்களுக்குள் கைப்பற்றப்பட்டது.

நகரத்தின் விமான நிலையம் தவிர மற்ற அனைத்து முக்கிய பகுதிகளும் தீவிரவாதிகளிடம் விழுந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

தீவிரவாத குழுவின் கொடி நகர மையத்தில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டிடங்கள் மற்றும் கடைகள் தீப்பற்றி எரிந்த குழப்பமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

வெள்ளிக்கிழமை முதல் இப்போது நான்கு முக்கிய தலைநகரங்கள் தலிபான்களின் வசம் உள்ளன.இதில் குண்டூஸ் இந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட நகரங்களில் மிக முக்கியமான ஒன்று.

இதேவேளை, தலிபான்கள் கைப்பற்றிய பகுதியை மீட்பதற்கு ஆப்கானிஸ்தான் இராணுவம் தாக்குதலை முன்னெடுத்துள்ளன.

இந்த தாக்குதலில் 200க்கும் அதிகமான, தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.