(Facebook :PrimeMinisterOfficePakistan)
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை வாடகைக்கு விட உள்ளதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இஸ்லாமாபாத்தில் உள்ள உத்தியோகபூர்வ இல்லமே இவ்வாறு வாடகைக்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஊடக அறிக்கையின்படி, இஸ்லாமாபாத்தில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை கலாசார, நவீன, கல்வி மற்றும் பிற நிகழ்வுகளை நடத்த விரும்புபவர்களுக்கு வாடகைக்கு கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்வுகளின் போது பிரதமர் மாளிகையின் “ஒழுக்கம் மற்றும் அதன் தனித்தன்மை” மீறாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு இந்த குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, இம்ரான் கான், பொது நலத் திட்டங்களுக்குச் செலவழிக்க மத்திய அரசிடம் பணம் இல்லை என்று அறிவித்தார்.
அதன் பின்னர் அவர் தனது பனிகாலா இல்லத்தில் வசித்து வருகிறார்.அதேபோல், பிரதமர் அலுவலகத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.
குறித்த இல்லத்திலிருந்து கிடைக்கும் வருமானம் பொது நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
கான் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தானின் பொருளாதாரம் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களால் சரிவடைந்துள்ளது.
இதனிடையே அவர் அரச செலவுகளைக் குறைக்க கடுமையான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.